சிவபெருமானை “நானா” என்று அழைக்கும் முஸ்லிம் நபர்! (படங்கள்)

இந்துக் கடவுளான சிவபெருமானின் கோவில் ஒன்றை முஸ்லிம் முதியவர் ஒருவர் பராமரித்து வருவது மத நல்லிணக்கத்திற்கு ஓர் எடுத்துக் காட்டாக அமைந்துள்ளது.

சிவன் ஆலயத்தில் தீபம் ஏற்றுவது முதல் கொண்டு அனைத்துப் பணிகளையும் மேற்கொண்டு வருகின்றார் இந்த முஸ்லிம் முதியவர்.

இது விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

இந்தியாவின் அசாம் மாநிலம் கவுகாத்தி அருகே பிரம்மபுத்தரா நதிக் கரையில் அமைந்துள்ள சிவன் கோவிலை முஸ்லிம் முதியவரான மோதிபர் ரஹ்மான் (வயது-79) என்பவர் பராமரித்து வருகின்றார்.

கோவிலைச் சுத்தம் செய்து மிகவும் தூய்மையாக வைத்துள்ளமை அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை சிவபெருமானை “நானா” என அன்புடன் அழைக்கும் அவர் தெரிவிக்கையில், எனது மூதாதையர் ஒருவரின் கனவில் தோன்றிய சிவபெருமான் கேட்டுக் கொண்டதன்படி பரம்பரை பரம்பரையாக இக் கோவிலைப் பராமரித்து வருகின்றோம் என்றார்.

அத்துடன் சுமார் 500 ஆண்டுகளாக எனது குடும்பத்தினர் இப் பணியினைச் செய்து வருவதுடன், “நானா” (சிவபெருமான்) தூய்மையை விரும்புபவர் என்பதால் கோவிலை நான் தூய்மையாக வைத்திருக்கின்றேன். எனக்குப் பின் எனது பிள்ளைகள் இப் பணியினை மேற்கொள்ளுவார்கள் என்றார்.
Previous Post Next Post