யாழில் குப்பைகளுடன் வந்து பிரதேச சபை முன்னால் போராட்டம்! (படங்கள்)

வீதியில் கிடந்த குப்பைகளைச் சேகரித்துக் கொண்டு வந்து சுன்னாகம் பிரதேச சபை முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் பிரதேச சபை உறுப்பினர்கள்.

வலிகாமம் தெற்கு (சுன்னாகம்) பிரதேச சபை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகையின் கீழ் உள்ள பிரதேச சபை. இச் சபையின் எதிர்க்கட்சிகளாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கட்சிகள் உள்ளன.

இந் நிலையில் இரு கட்சி உறுப்பினர்களும் சேர்ந்து இந் நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் பிரதேச சபைக்கு முன்பு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இவ் விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

வலிகாமம் தெற்கு பிரதேச சபையான சுன்னாகம் பிரதேச சபைக்குட்பட்ட பல பகுதிகளில் குப்பைகள் அகற்றப்படாமல் இருந்ததாகக் கூறியே, குப்பைகளுடன் இரு கட்சி உறுப்பினர்களும் பிரதேச சபைக்கு வந்தன.

பிரதேச சபை, குப்பைகளை அகற்றாத நிலையில் அந்தப் பகுதி மக்களுடன் இணைந்து உழவு இயந்திரங்களை வாடகைக்கு அமர்த்தி குப்பைகளை அகற்றியதாக உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

இவ்வாறு அகற்றியதாகக் கூறிய குப்பைகளை பிரதேச சபையின் முன்பாக கொண்டு வந்து பிரதேச சபைக்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டத்தில் உறுப்பினர்கள் ஈடுபட்டனர்.

இதன்போது சம்பவ இடத்துக்கு வந்த பிரதேச சபை தவிசாளர் கு.தர்சன், சபை உறுப்பினர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார்.

இதில் உறுப்பினர்கள் பிரதேச சபை தவிசாளர் மற்றும் நிர்வாகம் மீது கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தனர். ஆயினும் இக் குற்றச்சாட்டுக்களை தவிசாளர் மறுத்திருந்தார்.

அத்தோடு அரசியல் இலாபங்களுக்காக குற்றச்சாட்டுக்களை முன் வைத்து இவ்வாறு செயற்பட வேண்டாம் என தவிசாளர் கேட்டுக் கொண்டார்.

இதனையடுத்து இரு தரப்புக்கும் இடையில் கடும் வாக்குவாதங்கள் இடம்பெற்றுள்ளன.





Previous Post Next Post