பகிடிவதை விவகாரம்! மாணவன் ஒருவருக்கு வழங்கப்பட்ட தண்டனை!!

யாழ்.பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் பாலியல் ரீதியான பகிடிவதையில் ஈடுபட்டார் என்ற குற்றஞ்சாட்டுக்குள்ளாகிய மூத்த மாணவன் ஒருவருக்கு மறு அறிவித்தல் வரை பல்கலைக்கழக கற்கைநெறிகளில் ஈடுபடவோ, வளாகங்களுக்குள் நுழையவோ முடியாதவாறு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட மாணவன் மீதான ஒழுக்காற்று விசாரணைகளை முன்னெடுப்பதற்கு ஏதுவாகவும் விசாரணைகளில் தலையீடுகளைத் தவிர்ப்பதற்காகவும் பல்கலைக்கழக எல்லைக்குள் நுழைவதற்கான இடைக்காலத் தடை விதிக்கப்படுவதாக யாழ்.பல்கலைக்கழக நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்.பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தின் தொழில்நுட்ப பீடத்தின் முதுநிலை மாணவர்கள் சிலர் புதுமுக மாணவிகள் சிலர் மீது மோசமான பகிடிவதையில் ஈடுபட்டதாக பல்கலைக்கழக நிர்வாகத்திற்குக் கிடைத்த தகவலையடுத்து ஒழுக்காற்று குழு விசாரணைகளை ஆரம்பித்தது.

யாழ்.பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்திற்கு நேற்றுச் சென்றிருந்த குழு, அங்குள்ள அதிகாரிகள், மாணவர்கள் சிலரிடம் விசாரணைகளை முன்னெடுத்திருந்தது.

எனினும் பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் தரப்பிடமோ, குற்றஞ்சாட்டப்படும் தரப்பிடமோ விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை என்று தெரியவருகின்றது.


Previous Post Next Post