முல்லைத்தீவு முதல் வலம்புரி பத்திரிகை வரை தொடரும் மத வன்முறைகள்!

இந்து சமயத்துக்கும் அதன் ஆலயத்துக்கும் பிற மதங்களால் தொடுக்கப்பட்டுள்ள அறிவிக்கப்படாத யுத்தம் தற்போது வீறு கொண்டுள்ளது.

“எம் மதமும் சம்மதம்” என்ற கோட்பாட்டின் கீழ் உள்ள இந்து மதம் பிற மதங்களாலும் அதன் தலைவர்களாலும் அழிக்கப்படும் ஒரு சூழல் யாழ்ப்பாணத்தைச் சூழ்ந்து கொண்டுள்ளது என்பது வேதனையே.

ஒரு மதத்தின் தலைவர்களால் பிற மதத்தின் புனிதத் தன்மைக்கு பங்கம் ஏற்படுமாக இருந்தால் அவர், தான் சார்ந்த மதத்திற்கு தலைவராக இருப்பதற்கான தகுதியை இழந்து விடுகின்றார் என்பது நிறுத்திட்டமான உண்மை.

அந்தவகையில், முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில், புத்த பெருமானின் போதனைகளைப் பின்பற்றி ஒழுக்க சீடர்களாய் வாழக் கூடிய பௌத்த துறவிகளால் அரங்கேற்றப்பட்ட அநியாயங்கள், அட்டூழியங்கள் இந்து மக்களின் மனங்களில் இருந்து மறைவதற்கு முன்னர், வலம்புரிப் பத்திரிகை மீதான தாக்குதல் முயற்சி அரங்கேற்றப்பட்டுள்ளது.

இவ்விரு சம்பவங்களும் வெவ்வேறு மதங்களால் இந்து மதத்தின் மீது தொடுக்கப்பட்ட யுத்தமாகவே பார்க்கப்படுகின்றது.

எனவே இனிவரும் காலங்களில் இந்து மக்களின் புனித ஸ்தலங்கள், மரபுச் சின்னங்கள் சிதைக்கப்படுமாக இருந்தால் அல்லது அழிக்கப்படுமாக இருந்தால் இனியும் இந்துக்களின் மௌனம் தொடருமாக இருந்தால் இந்து மதத்தின் தடையங்கள் கூட மிஞ்சாத ஒரு துர்ப்பாக்கிய நிலை தோற்றுவிக்கப்படும்.

இதேவேளை யாழ்ப்பாணத்தைப் பொறுத்தமட்டில் பௌத்த விகாரை அமைப்பதற்கு வெளிப்படுத்தப்படும் எதிர்ப்புக்கள், தேவாலயங்கள் அமைப்பதற்கோ, அல்லது வீதிகளின் திருப்பங்களில் சொரூபங்கள் அமைப்பதற்கே வெளிப்படுத்தப்படுவதில்லை.

இதனால்தான் இந்துப் பெயர் கொண்டு அழைக்கப்பட்ட வீதிகள் தற்போது கிறிஸ்தவப் பெயர்களாக மாற்றம் அடைகின்றது. இந்துப் பாடசாலைகள் கிறிஸ்தவப் பாடசாலைகளாக மாற்றமடைகின்றது. இவற்றையெல்லாம் தட்டிக் கேட்டால் பத்திரிகை அலுவலகம் தாக்கப்படுகின்றது.

எனவே மேற்குறித்த செயற்பாடுகள் தொடர்வதற்கு இனிவரும் காலங்களில் இந்து மக்கள் அனுமதிக்கக் கூடாது என்பதுடன், எங்கள் தமிழ் மரபு அழிக்கப்படுவதற்கு எதிப்பைத் தெரிவித்து எங்கள் இருப்பை தக்க வைத்துக் கொள்ள அனைத்து இந்துக்களுக்கும் இவ்விடத்தில் அழைப்பு விடுக்கின்றோம்.
Previous Post Next Post