தரம் 5 மாணவர்களுக்கு நொதேண் விளையாட்டுக் கழகத்தின் உதவிகள்! (வீடியோ)

யாழ்ப்பாணத்தில் தரம் 5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்கு இலவச கற்றல் கையேடுகள் வழங்கப்பட்டுள்ளன.

தமிழ் இளையோர் மக்கள் இயக்கம் மற்றும் நொதோண் விளையாட்டுக் கழகம் ஆகியன இணைந்து குறித்த இலவசக் கையேடுகள் வழங்கப்பட்டுள்ளன.

அந்தவகையில், நொதேண் விளையாட்டுக் கழகத்தினால் யா/நல்லூர் காசிப்பிள்ளை வித்தியாலயம், யா/திருநெல்வேலி றோமன் கத்தோலிக்க தமிழ்க் கலவன் பாடசாலை மற்றும் யா/கல்வியங்காடு இந்து தமிழ்க் கலவன் பாடசாலை ஆகிய பாடசாலைகளின் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள எண்பது (80) மாணவா்களுக்கு இக் கையேடுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொருவருக்கும் சுமார் 500 ரூபாய் பெறுமதி கொண்ட இலவசக் கையேடுகள் வழங்கிவைக்கப்பட்டன.
நொதேண் விளையாட்டுக் கழக கல்விசார் செயற்பாட்டுப் பிரிவினரால் "கல்விக்குக் கைகொடுப்போம்" என்ற செயற்திட்டத்திற்கமைய இக் கையேடுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி கிழக்கு வாலையம்மன் சனசமூக நிலைய புலம்பெயர் தேச முன்னாள் உறுப்பினர்களின் அனுசரணையுடன் "தமிழ் இளையோர் மக்கள் இயக்கம்" என்ற அமைப்பினூடாக இக் கையேடுகள்  வழங்கிவைக்கப்பட்டன.

நாட்டில் கொரோனா தொற்று காரணமாக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் முற்றாக முடக்கப்பட்டிருக்கும் இவ்வேளையில் மாணவர்கள் வீட்டிலிருந்து கற்பதற்குரிய வழிவகைகளை கல்வித் திணைக்களம் மேற்கொண்டுள்ளது.


இதனால்  மாணவர்களுக்குரிய கற்றல் விடயங்களை PDF கோப்புகளாக பெற்றோருக்கு அனுப்பி வைத்தபோதும் கிராமப்புறங்களில் அடிப்படை வசதிகளற்று வறுமையில் வாடுகின்ற பெற்றோர்களுக்கு பரீட்சைக்குரிய விடயங்களை போட்டோ பிரதி செய்யக்கூடிய வசதிகளோ பிறிண்ட் செய்யக்கூடிய வசதிகளோ காணப்படவில்லை.

இவற்றைக் கருத்தில் கொண்டு தமிழ் இளையோர் மக்கள் இயக்கத்தினர் மாகாணக் கல்வித் திணைக்களம், வலயக் கல்வித் திணைக்களம், தரம் ஐந்து புலமைப்பரிசில் சிரேஷ்ட ஆசிரியர்கள் மற்றும் ஆசிரிய ஆலோசகர்களால் தயாரிக்கப்பட்ட மாதிரி வினாத்தாள்கள், செயலட்டைகள் மற்றும் குறிப்புக்கள் முதலியவற்றை உள்ளடக்கிய இலவச கையேடுகளைத் தயாரித்து புலம்பெயர்தேச உறவுகளின் நிதி உதவியுடன் தமிழ் இளையோர் மக்கள் இயக்கமும் நொதேண் விளையாட்டுக் கழகமும் இணைந்து இலவசமாக வழங்க முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Previous Post Next Post