யாழ்.வேலணை அராலிச் சந்தியில் தனிமையில் நின்ற நபரை மீட்ட கிராம அலுவலர்!

யாழ்.தீவகம், மண்கும்பான், சாமிக்காட்டு வீதியில் நேற்றைய தினம் நபர் ஒருவர் நடமாடியமை அப் பகுதியில் உள்ள மக்களால் அவதானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் உடனடியாக அப் பகுதி கிராம அலுவலருக்கு மக்களால் தெரியப்படுத்தப்பட்டது. கிராம அலுவலர் உடனடியாகப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கி, அங்கு சென்றபோது குறித்த நபர் காணாமல் போயுள்ளார்.

இந் நிலையில் குறித்த நபர் இன்று வேலணை, அராலிச் சந்தியில் நிற்பது தொடர்பில் தகவல் அறிந்த மண்கும்பான் ஜே-11 கிராம அலுவலர் வாகீசன், சம்பவ இடத்துக்குச் சென்று பார்த்தபோது, அவர் மனநலம் குன்றிய நிலையில் காணப்பட்டுள்ளார்.


உடனடியாக கிராம அலுவலர் அந் நபரை தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றி வந்து வேலணை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார். அதன்பின்னர் கிராம அலுவலர்களின் வைபர் குழுவில் இது குறித்த தகவலைப் பகிர்ந்து, குறித்த நபர் யார் என்பதை அறிந்துள்ளார்.

குறித்த குழுவில் இருக்கும் கிராம அலுவலர் இந் நபர் தொடர்பில் அறிவித்துள்ளதுடன், அவர் யாழ்ப்பாணம் நாவாந்துறையைச் சேர்ந்தவர் என்றும் தெரிவித்துள்ளார்.

இந் நிலையில் குறித்த நபரை உறவினர்களிடம் ஒப்படைப்பதற்குத் தற்போது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.Previous Post Next Post