பிரான்ஸ் - Seine-Saint-Denis! மீண்டும் அதியுச்ச கொரோனாத் தொற்று!!

பிரான்ஸின் வடமேற்கிலுள்ள Mayenne பகுதி மிக மோசமாக வைரஸ் பரவலால் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு நிலைமை எச்சரிக்கை அளவை தாண்டியுள்ளது. முடக்கப்படவேண்டிய கட்டத்தை எட்டியுள்ள அப்பகுதியில் வாழும் சுமார் ஒரு லட்சம் மக்களையும் வைரஸ் பரிசோதனைக்கு உட்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

புதிதாக மேலும் பலர் வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளனர் பிரான்ஸின் கடல் கடந்த மாகாணங்களாக உள்ள பிரெஞ்சு கயானா (Guyane), Mayotte தீவு ஆகிய இடங்களில் வைரஸ் தீவிரமாகப் பரவியுள்ளது.

இந்த இரு பகுதிகளிலும் சுகாதார அவசரகால நிலைமை ஒக்ரோபர் மாதம் வரை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது, அதேவேளை, கொரோனா வைரஸ் தாக்கம் Île-de-France பிராந்தியத்தில் மீண்டும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், பாரிசின் மருத்துவமனைகள் தயார் நிலையில் இருப்பதாக சுகாதார அமைச்சர் Olivier Véran தெரிவித்துள்ளார்.

நேற்று (16/07/2020) வியாழக்கிழமை காலை FRANCE INTER வானொலிக்கு வழங்கிய செவ்வியில் இதனை அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

‘கொரோனாவின் தாக்கம் இன்னமும் குறையவில்லை. கடந்த ஒருவாரத்தில் கணிசமான அளவு நோயாளர்களை நாம் குணப்படுத்தியுள்ளோம். அவை அச்சப்படும்படியான எண்ணிக்கை இல்லாத போதும், பாரிசின் மருத்துவமனைகள் தயாராகவே உள்ளன’ என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

இதேவேளை, Île-de-Franceசின் 93ம் மாவட்டமான Seine-Saint-Denis, மீண்டும் கடுமையான கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் தொற்றின் எச்சரிக்கை அவதானிப்பு எல்லையை Île-de-France சின் 93வது மாவட்டம் தாண்டி உள்ளது. இங்கு ஒரு இலட்சம் பேருக்கு, 10.1 பேர் என்ற வீதத்தில் தொற்று ஏற்பட்டுள்ளது.

கடந்த 6 மற்றும் 12ம் திகதி ஜுலை மாதத்திற்குள்ளாகவே இந்தத் தொற்று அதிகரித்துள்ளது. இங்கு கடந்த வாரம் Saint-Ouenஇல் உள்ள Anatole-France பாலர் பாடசாலையில் 21 குழந்தைகள் உட்பட 27 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருந்தமை கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிறு பிள்ளைகளுக்கு தொற்று ஏற்படாது, அனைவரும் பாடசாலைக்குச் செல்லுங்கள் என்று கூறிய இம்மானுவல் மக்ரோனின் கூற்று, பொய்க்கூற்று என்பதை இது நிரூபித்துள்ளது.

•••அதிரடியாக அடுத்தவாரம் முதல் கட்டாயமாக்கப்பட்ட முகக்கவசம்••• 

கொரோனாவை எதிர்கொள்ளும் மற்றுமொரு நடவடிக்கையாக அனைத்து பொது இடங்களிலும் ( lieu public clos) முகக்கவசம் அணிவதை ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் கட்டாயப்படுத்தியுள்ளதாக அரசு இந்தவாரம் அறிவித்திருந்தது. ஆனால் அந்த நடைமுறை அடுத்த வாரம் முதல் அமுலுக்கு வருவதாக பிரதமர் Jean Castex நேற்று அறிவித்தார்.
Previous Post Next Post