நிஜேர் - 6 பிரஞ்சுப் பிரஜைகள் படுகொலை! நடந்தது என்ன? (படங்கள்)

நிஜேர் (NIGER) நாட்டில் தொண்டு நிறுவன வாகனத்தில் சென்ற ஆறு பிரெஞ்சுக்
 குடிமக்களும், அவர்களிற்கு வழிகாட்டியாகச் சென்ற இரண்டு நிஜேர் பிரஜைகளும் நேற்றுப் பயங்கரவாதிகளால் படுகொலை வெய்யப்பட்டுள்ளனர்.

நிஜேரின் தலைநகரமான நியாமேயிலிருந்து 6 கிலோமீற்றர் தூரத்தில் உள்ள கூரே (Kouré) எனும் இடத்தில் இந்தத் தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.

இந்தப் பகுதிக்கு வாகனங்கள் வருவதைக் கண்டுவிட்டு அங்கு உந்துருளியில் வந்த பயங்கரவாதிகள் இந்த வாகனத்தின் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளனர்.


இதில் இவர்களை அழைத்துச் சென்ற வழிகாட்டி நிறுவனத்தின் தலைவரான 50 வயதுடைய Kadri Abdou மற்றும் வாகனச்சாரதி ஆகிய நிஜேர் குடிமக்களும், ஆறு பிரெஞ்சுக் குடிமக்களும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் பிரெஞ்சு நேரம் 12h30 (நியாமேயில் 11h30) இற்கு நியாமேயிற்குச் செல்லும் 1ம் இலக்க தேசியசாலையில், கூரே பகுதியில் நடந்துள்ளது.

இவர்கள் சென்ற வாகனம் ONG Acted தொண்டு நிறுவனத்திற்குச் சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் இருந்து தப்பிச் சென்ற பிரெஞ்சுப் பெண்ணொருவர் துரத்திப் பிடிக்கப்பட்டு கழுத்து அறுத்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். மற்றவர்கள் அனைவரிற்கும் தலையின் பின் புறத்தில் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்துள்ளன. இவர்கள் வாகனம் கொழுத்தப்பட்டதுடன் ஒரு உடலமும் முக்கால்வாசி எரிக்கப்பட்டுள்ளது.

உடனடியாக நிஜேரின் இராணுவம் உலங்குவானூர்திகளுடன் தேடுதல் நடாத்தியும் பயங்கரவாதிகள் எவரும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஏற்கனவே இந்தப் பகுதிகள் மிகவும் ஆபத்தான பகுதிகளாகப் பிரெஞ்சு வெளியுறவு அமைச்சினால் எச்சரிக்கப்பட்ட பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.



Previous Post Next Post