சசிகலா விவகாரம்: சுமந்திரன் பா.ம.உறுப்பினராக பதவியேற்க இடைக்கால தடை கோர முயற்சி! (வீடியோ)

தமிழரசுக் கட்சிக்கு கிடைத்த மூன்று ஆசனங்களை பங்கிடுவது தொடர்பில் விருப்பு வாக்கு கணக்கெடுப்பில் சசிகலா-ரவிராஜிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு தீர்வு கிடைக்கும் வரை சுமந்திரன் பாராளுமன்ற உறுப்பினராக பதிவியேற்க இடைக்கால தடை கோரி வழக்கு தாக்கல் செய்ய உள்ளதாக முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

மாமனிதர் ரவிராஜ் அவர்களது மனைவியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற வேட்பாளருமான சசிகலா-ரவிராஜ் அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதிகோரி தென்மராட்சி பிரதேச செயலகத்திற்கு முன்பாக உள்ள ரவிராஜ் அவர்களது உருவச்சிலைக்கு முன்பாக அமைதி வழிப் போராட்டம் இன்று காலை முதல் முன்னெடுக்கப்பட்டிருந்தது.


இந்நிலையில் அநீதி இழைக்கப்பட்ட சசிகலா-ரவிராஜை அவரது இல்லத்திற்கு நேரில் சென்று பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் முன்னாள் வடமாகாண சபை அமைச்சர் அனந்தி-சசிதரன் ஆகியோர் சந்தித்து ஆறுதல் தெரிவித்திருந்தனர்.

இதன்போது கருத்துத் தெரிவிக்கும் போதே சிவாஜிலிங்கம் மேற்குறித்த தகவலை வழங்கியிருந்தார். தொடர்ந்து அது குறித்து அவர் தெரிவிக்கையில்,

வாக்கு எண்ணும் பணி இடம்பெற்ற யாழ். மத்திய கல்லூரி வளாகத்தில் ஏற்பட்ட அசம்பாவிதம் மற்றும் அநீதி இழைப்பு ஆகியவற்றால் பாதிப்புற்ற சசிகலா-ரவிராஜ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்கும் முகமாக சந்தித்துள்ளோம்.


இச்சந்திப்பின் போது விருப்பு வாக்கு விடயத்தில் இழைக்கப்பட்ட அநீதிக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும். அவர் விரும்பினால் அது தொடர்பில் தேர்தல் ஆணையாளர் உள்ளிட்ட தொடர்புடையவர்களை சந்தித்து அடுத்தகட்ட நடவடிக்கையை முன்னெடுக்க தயாராக இருப்பதாகவும், அதுவரை பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாகியிருக்கும் எம்.ஏ.சுமந்திரன் பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்க இடைக்காலத் தடை கோரி வழக்கு தாக்கல் செய்யலாம் எனவும் கூறியுள்ளோம்.

திருமதி சசிகலா-ரவிராஜ் அவர்கள் எமது கோரிக்கைகள் குறித்து சாதகமாக பரிசீலிப்பதாக தெரிகிறது. அவர் சம்மதம் தெரிவித்தால் தாம் அதற்கான முயற்சிகளில் ஈடுபட உள்ளதாக தமிழ் மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் மேலும் தெரிவத்திருந்தார்.

முன்னதாக் தென்மராட்சி பிரதேச் செயலகத்திற்கு முன்பாக உள்ள மாமனிதர் ரவிராஜின் உருவச் சிலைக்கு முன்பாக, சசிகலா-ரவிராஜிற்கு நீதி கோரி அமைதிவழி போராட்டத்தை முன்னெடுத்து வந்தவர்களையும் நேரில் சந்தித்து கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


இதேவேளை  கட்சி வேறுபாட்டின்றி சசிகலாவுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு ஒருமித்துக் குரல் கொடுக்க  வேண்டும் என்றும், அதற்கு தனது பங்களிப்பு நிச்சயம் இருக்கும் என்றும் அங்கஜன் இராமநாதன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று காலை முதல் முன்னெடுக்கப்பட்டு வந்த சசிகலா-ரவிராஜிற்கு நீதி கோரி அமைதிவழி போராட்டம் இன்று மதியம் 2.00 மணியளவில் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

வெய்யிலில் இருந்து கஷ்டப்பட வேண்டாம் என சசிகலா-ரவிராஜ் விடுத்த வேண்டுகோளை அடுத்து குறித்த போராட்டத்தை மாமனிதர் ரவிராஜின் ஆதரவாளர்கள் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளனர். சசிகலா-ரவிராஜிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கோரும் போராட்டத்தின் அடுத்த கட்ட போராட்டம் குறித்து ஆலோசித்து முடிவெடுக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
Previous Post Next Post