யாழில் இளைஞர்களுக்கு இலவசமாக “பியர்” வழங்கிய கூட்டமைப்பு வேட்பாளர்!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் ஒருவர், தனது படம் பொறிக்கப்பட்ட இலவச பியர் ரின் விநியோகித்ததாக முறையிடப்பட்டுள்ளது. தென்மராட்சி பிரதேசங்களில் நேற்று இரவு பரவலாக பியர் ரின் விநியோகிக்கப்பட்டுள்ளது.

ஹைஏஸ் வாகனம் ஒன்றில் வந்த கூட்டமைப்பு வேட்பாளர் ஒருவரின் ஆதரவாளர்களான இளைஞர்கள் மீசாலை, அல்லாரை, புத்தூர் சந்தியடி பகுதிகளில் இளைஞர்களிற்கு பியர் வழங்கினர்.

இளைஞர்கள் கூட்டமாக நிற்கும் இடங்கள், விளையாட ஒன்றுகூடுமிடங்களில் வாகனத்தை நிறுத்தி இலவச பியர் வழங்கினர். அந்த பியர் ரின்களில் வேட்பாளரின் படம் பொறிக்கப்பட்ட பிரசுரம் ஒட்டப்பட்டிருந்தது.

அந்த பகுதிகளில் மதுபானம் விநியோகிப்பது தொடர்பில் சாவகச்சேரி பொலிசாருக்கு பொதுமக்கள் தொலைபேசியில் முறையிட்டனர். பொலிசார் வந்தபோது, புத்தூர் சந்திக்கு அண்மையில் ஐயா கடையடி பகுதியில் மதுபான விநியோகம் நடந்தது.

பொலிசாரை கண்டதும், ஹைஏஸ் வாகனம் தப்பியோடி விட்டது. இந்த நிலையில், பியர் ரின்களுடன் இன்று சாவகச்சேரி பொலிஸ் நிலையத்திற்கு சென்ற பொதுமகன் ஒருவர், முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
Previous Post Next Post