யாழில் குடும்பமாகக் கொரோனாச் சிகிச்சைக்குச் சென்றவர்களின் வீட்டில் திருட்டு!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
பருத்தித்துறை ஓடக்கரையில் ஒரே குடும்பைத்தைச் சேர்ந்த நால்வருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டமையால் அவர்கள் கோவிட் -19 சிகிச்சை நிலையத்தில் 2 வாரங்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர்களது வீடு உடைத்து திருடர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.

குடும்பத்தினர் இன்று சிகிச்சை முடிவடைந்து வீடு திரும்பிய நிலையில் வீடு உடைக்கப்பட்டு பெறுமதியான பொருள்கள் மற்றும் பணம் திருடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

கொழும்பில் மருத்துவ சிகிச்சைக்காக ஒரு மாதம் தங்கியிருந்து வீடு திரும்பிய குடும்பத்தில் 34 வயதுடைய குடும்பத் தலைவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கடந்த டிசெம்பர் 3ஆம் திகதி கண்டறியப்பட்டது.

இந்த நிலையில் அவரது மனைவி, பிள்ளை மற்றும் மாமியார் என மூவருக்கு கொரோனா தொற்று உள்ளமை டிசெம்பர் 5ஆம் திகதி கண்டறியப்பட்டது.

அவர்கள் குடும்பமாக கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரி கோவிட் -19 சிகிச்சை நிலையத்தில் கடந்த 5ஆம் திகதி தொடக்கம் சிகிச்சை பெற்று வந்தனர். அதனால் அவர்களது வீடு பூட்டியிருந்துள்ளது.

அந்தக் குடும்பம் கோவிட் -19 நோயிலிருந்து முழுமையாகக் குணமடைந்த நிலையில் இன்று விடுவிக்கப்பட்டது. அவர்கள் வீடு திரும்பிய போது அங்கு கூரை ஓடுகள் மற்றும் யன்னல் உடைக்கப்படிருந்தமையை அவதானித்தனர்.

அதுதொடர்பில் பொதுச் சுகாதார பரிசோதகருக்கு அவர்களால் தகவல் வழங்கப்பட்டது. வீட்டிலிருந்து பெறுமதியான அதிதிறன் அலைபேசி, கமரா மற்றும் 80 ஆயிரம் ரூபாய் பணம் திருட்டுப்போயுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அந்த வீட்டில் கிருமித் தொற்று நீக்கி விசிறப்படாத நிலையில் திருடர்கள் தங்கள் கைவரிசையைக் காண்பித்துள்ளனர் என்று சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.

அந்தக் குடும்பம் மீளவும் 14 நாள்கள் வீட்டில் சுயதனிமைப்படுத்தப்படவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post