பங்காளிக் கட்சிகளுடன் முரண்பாடு! பதவி விலகினார் சிறிதரன் எம்.பி.!!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளிடையே ஏற்பட்டுள்ள விரிசல் உச்சக் கட்டத்தை அடைந்திருக்கிறது. பங்காளிக் கட்சிகளிடையேயான கருத்து முரண்பாட்டின் காரணமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொறடா (நாடாளுமன்றில் கட்சியின் ஒழுக்கத்தை நிலைநாட்டுபவர் ) பதவியில் இருந்து இந்த மாதம் 10ஆம் திகதி முதல், தான் விலகி விட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவி்த்தார்.

கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவின் கொறடா பதவியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் விலகியுள்ளதாக இன்று முன்னிரவு தகவல்கள் வெளியாகின.

இந்தச் செய்தி தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரனிடம் தொடர்பு கொண்டுகேட்ட போது, அவர் செய்தியை உறுதிப்படுத்தினார்.

“கடந்த 5 வருடமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கொறடா பதவியில்இருந்துள்ளேன். அதுமட்டுமல்லாது கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் கருத்தாடல்கள் ஆரோக்கியமாக இல்லை. அவர்கள் கொறடா என்கின்ற பதவியினை வைத்து சிறீதரன் பணம் சம்பாதிப்பது போல் ஒரு மாயயை ஊடகங்களில் உருவாக்கி வருகிறார்கள்.

ஆகவே, அவ்வாறானதொரு பதவி எனக்கு தேவை இல்லை. அதனால் நான் பதவியில் இருந்து விலகிஉள்ளேன்” என்று நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்தார்.

“இந்த விடயம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சம்பந்தனிடம் உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளேன்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த டிசெம்பர் 10ஆம் திகதியுடன் இந்த ஆண்டுக்கான நாடாளுமன்ற அமர்வுகள் நிறைவடைந்தன. 2021ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற அமர்வுகள் ஜனவரி 5ஆம் திகதி ஆரம்பாகின்றது.
Previous Post Next Post