பிரான்ஸில் ஜனவரி 20 இல் உணவகங்களைத் திறக்க வாய்ப்பில்லை! எதிர்வரும் நாள்களில் புதிய தீர்மானங்கள்!!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
பிரான்ஸில் உணவகங்கள் எதிர்வரும் 20 திகதி திறக்கப்படுவதற்கு வாய்ப்பில்லை. அவை பற்றிய புதிய தீர்மானங்கள் எதிர்வரும் நாள்களில் அறிவிக்கப்படும்.

சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங் களுக்குப் பொறுப்பான அமைச்சர் (ministre délégué aux petites et moyennes enterprises) அலெய்ன் கிறிசெற் (Alain Griset) இத்தகவலை 'ஈரோப்-1' (Europe 1) தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்திருக்கிறார்.

"விடுமுறைக்குப் பின்னர் வைரஸ் தொற்று எந்தளவுக்கு இருக்கப்போகிறது என்பதை உன்னிப்பாக அவதானித்து வருகின்றோம். அதனைப்பொறுத்து புதிய தீர்மானங்கள் ஜனவரி 10 ஆம் திகதிவாக்கில் எடுக்கப்படும்" - என்று அமைச்சர் மேலும் கூறியிருக்கிறார். 

உணவகங்கள், அருந்தகங்கள் என்பன தங்கள் வழமையான சேவைகளை வழங்குவது கடந்த ஒக்ரோபர் மாதம் முதல் நிறுத்தப்பட்டிருப்பது தெரிந்ததே. ஜனவரி 20 ஆம் திகதி அவற்றை மீளத் திறப்பது என்று அரசு முன்னர் அறிவித்திருந்தது.

நாளாந்த தொற்றுக்களின் எண்ணிக்கை ஐயாயிரம் என்ற அளவை எட்டினால் மட்டுமே உணவகங்களைத் திறக்க அனுமதிக்கப்படும் என்று அதிபர் எமானுவல் மக்ரோன் தனது தொலைக்காட்சி உரையில் அறிவித்திருந்தார்.

ஆனால் எதிர்பார்த்தது போன்று நாட்டில் தொற்று வேகம் குறையவில்லை. இதனால் உணவகங்கள் தொடர்பாக புதிய தீர்மானங்கள் வரும் நாட்களில் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை முன்னர் அறிவிக்கப்பட்டபடி சினிமா அரங்குகள், அருங்காட்சியகங்கள் போன்றன ஜனவரி 7ஆம் திகதி திறக்கப்பட மாட்டாது என்றும் தகவல் வெளியாகியுள்ளது. 

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் மீளெழுச்சி கொண்டுவருவதால் 15 மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கு நேரம் மாலை ஆறு மணியாக அதிகரிக்கப்பட்டிருப்பது தெரிந்ததே.

பாரிஸ் நகரை உள்ளடக்கிய இல்-து-பிரான்ஸ் பிராந்தியத்தின் சில பகுதிகளும் ஊரடங்கு நேரத்தை அதிகரிக்க வேண்டிய அளவிலான தொற்று வீதத்தை நெருங்கியுள்ளன எனத் தகவல் வெளியாகி உள்ளது.
Previous Post Next Post