பிரான்ஸில் அதிகரிக்கும் டெல்ரா வைரஸ்! தெற்கு பிராந்தியத்தில் உணவகங்கள் இரவு 11 மணி முதல் மூடல்!!


  • குமாரதாஸன், பாரிஸ்.
பிரான்ஸின் தெற்குக் கரையோரம் அமைந்துள்ள Pyrénées-Orientales பிராந்தியம் டெல்ரா வைரஸ் தொற்றினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து மீண்டும் சுகாதாரக் கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. கடற்கரை தவிர்ந்த பொது இடங்களில் மாஸ்க் அணிய வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

அங்கு இரவு 11 மணி முதல் ஊரடங்கை ஒத்த கட்டுப்பாடுகள் அமுலுக்குக் கொண்டு வரப்படுகிறன. உணவகங்களும் அருந்தகங்களும் கடற்கரையோர விற்பனை நிலையங்களும் இரவு 11 மணிமுதல் மூடப்பட வேண்டும் என்று பொலீஸார் அறிவித்துள்ளனர்.

எதிர்வரும் ஓகஸ்ட் 2ஆம் திகதி வரை இரவு 11 மணி முதல் மறுநாள் காலை
ஆறு மணிவரை இந்தக் கட்டுப்பாடுகள் அமுலில் இருக்கும்.அத்துடன் ஸ்பெயினில் இருந்து அங்கு வருவோர் 24 மணி நேரத்துக்குள் செய்யப்பட்ட வைரஸ் சோதனை சான்றிதழைச் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
 
நாட்டிலேயே மிக அதிக அளவிலான தொற்று பிரதேசமாக Pyrénées-Orientales
அறிவிக்கப்பட்டிருக்கிறது. அங்கு தொற்று எண்ணிக்கை ஒரு லட்சம் பேருக்கு 257 என்ற வீதத்தில் உள்ளது.

அது சுகாதாரக் கட்டுப்பாடுகளை அமுல் செய்யவேண்டிய குறியீட்டு அளவை விட அதிகமாகும்.தொற்று அதிகரிக்கின்ற ஏனைய பிரதேசங்களிலும் இது போன்று உள்ளூர் மட்டத்தில் சுகாதார விதிகள் அறிவிக்கப்படும்.
 
இதேவேளை இங்கிலாந்து, நெதர்லாந்து, ஸ்பெயின், கிறீஸ், போர்த்துக்கல், சைப்பிரஸ் ஆகிய நாடுகளில் இருந்து பிரான்ஸ் வருகின்ற தடுப்பூசி ஏற்றாத பயணிகள், 24 மணிநேரத்துக்குள் செய்யப்பட்ட வைரஸ் பரிசோதனை அறிக்கை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பிரதமர் அலுவலகம் இதனை இன்று அறிவித்திருக்கிறது.
Previous Post Next Post