யாழில் வீதியில் நின்றவர்கள் மீது வாள்வெட்டு! இருவர் கைது!! நால்வர் தலைமறைவு!!! (சிசிரிவி வீடியோ)


உடுப்பிட்டி நாலவலடியில் அண்மையில் இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்திய கும்பலில் இருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். ஏனைய நான்கு பேர் தலைமறைவாகியுள்ள நிலையில் தேடப்பட்டு வருகின்றனர் என்று வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

உடுப்பிட்டி நாவலடியில் வீதியில் கதைத்துக் கொண்டிருந்த இளைஞர்கள் மீது அங்கு மோட்டார் சைக்கிள்களில் வாள்களுடன் வந்த கும்பல் ஒன்று தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பிச் சென்றது.

இந்தச் சம்பவம் கடந்த 20ஆம் திகதி இரவு இடம்பெற்றது. சம்பவம் தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.

விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் தாக்குதல் நடத்திய கும்பலைச் சேர்ந்த ஒருவரை கடந்த வாரம் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தினர். சந்தேக நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

மற்றொரு சந்தேக நபர் நேற்று கைது செய்யப்பட்டார். 24 வயதுடைய அவர் இன்று பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டார். இரண்டாவது சந்தேக நபரிடம் வாள் ஒன்றும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டது.

சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் நால்வர் தலைமறைவாகி உள்ளனர் என்று வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
Previous Post Next Post