“பொறுப்பற்றோர் குடிமக்கள் அல்லர்” தடுப்பூசி ஏற்றாதவர்கள் மீது பிரான்ஸ் அதிபர் மக்ரோன் பாய்ச்சல்!


  • குமாரதாஸன். பாரிஸ்.
அதிபர் எமானுவல் மக்ரோன்'பரிஷியன்'(Le Parisien) செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள ஒரு செவ்வியில் தடுப்பூசி ஏற்றாதவர்களை முதன் முறையாகக் கடும் வார்த்தைகளால் சாடியிருக்கிறார்.

வேண்டுமென்றே ஊசி ஏற்றாமல் இருப்பவர்களைத் தொடர்ந்து சீண்ட-தொந்தரவு செய்ய - நெருக்குதல் கொடுக்க விரும்புகிறார் என்ற சாரப்பட அவர் கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார்.
 
அவரது கருத்துகள் எதிர்க்கட்சிகளின் கண்டனக் கணைகளுக்கு இலக்காகியுள்ளன. தடுப்பூசிப் பாஸ் பிரேரணை மீது நாடாளுமன்றத்தில் காரசாரமான விவாதங்கள் நடைபெற்றுவருகின்ற வேளையில் அரசுத் தலைவரது இந்தச் செவ்வி வெளியாகியிருக்கிறது.
 
அவசர சிகிச்சைப் பிரிவுகளில் 85 வீதமானவை தடுப்பூசி ஏற்றாதவர்களால் நிறைந்துள்ளன. அதனால் வழக்கமான சத்திர சிகிச்சைகள் பல ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்தநிலைமையைச் சுட்டிக்காட்டி மக்ரோனிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதிலளித்த அவர் - "ஐனநாயக நாட்டில் பொய்யும் முட்டாள் தனங்களும் தான் மோசமான எதிரிகள். கிட்டத்தட்ட அனைத்து மக்களும் - 90வீதமானவர்கள் - தடுப்பூசியை ஏற்றியுள்ளனர். ஒரு சிறிய பிரிவினரிடமே அதற்கு எதிர்ப்பு இருக்கிறது. அவர்களில் பலர் வேண்டும் என்றே தடுப்பூசியை எதிர்க்கின்றனர். 

உண்மையில் அத்தகையோரைத் தொடர்ந்து சீண்டி அவர்களுக்குக் கரைச்சல் கொடுக்கவே விரும்புகிறேன். நான் பிரெஞ்சு மக்களை ஆத்திரமூட்ட விரும்பவில்லை. ஆனால் இந்தச் சிறு பிரிவினருக்குத் தொடர்ந்து கடைசிவரை அழுத்தம் கொடுப்பதே எமது உத்தி." "நான் அவர்களைச் சிறையில் அடைக்க விரும்பவில்லை.அவர்களுக்குப் பலாத்காரமாகத் தடுப்பூசி ஏற்றப்போவதில்லை.

ஆனால் அவர்களுக்கு ஒன்றைச்சொல்லி வைக்க விரும்புகிறேன். ஜனவரி 15 ஆம் திகதிக்குப் பின்னர் அவர்கள் உணவகத்துக்குச் செல்ல முடியாது. அருந்தகத்துக்கோ, சினிமாவுக்கோ போக முடியாது" "ஆனால் மருத்துவமனைகளில் சேர்க்கப்படுவோரில் இந்தப் பாகுபாட்டைக் காட்ட முடியாது. 

மருத்துவர்களைப் பொறுத்தவரை சகலரும் நோயாளிகளே தவிர அவர்கள் யார், எங்கிருந்து, எப்படி வருகிறார்கள் என்ற தெரிவுகளுக்கு இடமிருப்பதில்லை. மருத்துவப் பணியாளர்களை அவ்வாறு ஒரு தெரிவைச் செய்கின்ற சிக்கலில் விட்டுவிடமாட்டோம் "

"தடுப்பூசியை எதிர்ப்பவர்களது தார்மீகத் தவறு ஒரு தேசத்தின் திடத்தன்மையைக் குறைமதிப்புக்குட்படுத்துகின்றது. எனது சுதந்திரம் மற்றவர்களது சுதந்திரத்தை அச்சுறுத்துகின்ற போது நான் பொறுப்பற்றவனாக மாறுகின்றேன். பொறுப்பற்றவர்கள் நாட்டின் குடிமக்கள் அல்லர் " -இவ்வாறு மக்ரோன் அழுத்தமாகத் தெரிவித்திருக்கிறார். 
  • மூன்று லட்சத்தை எட்டும் தொற்று!
பிரான்ஸில் நாள் ஒன்றுக்கான வைரஸ் தொற்று எண்ணிக்கை மூன்று லட்சங்களை நெருங்குகிறது. நேற்று மட்டும் 2லட்சத்து 71 ஆயிரத்து 686 தொற்றுக்கள் (271,686) பதிவாகியிருக்கின்றன.

மருத்துவமனைகளில் அழுத்தம் அதிகரித்து வருகிறது.கடந்த ஆண்டு மே மாதத்தின் பின்னர் முதல் தடவையாக நாட்டில் மருத்துவமனை அனுமதிகள் 20 ஆயிரம் (20,186) என்ற கணக்கைத் தாண்டியுள்ளன.

தற்சமயம் பாவனையில் உள்ள சுகாதாரப் பாஸை தடுப்பூசிப் பாஸாக மாற்றி ஊசி ஏற்றாதவர்கள் மீது மேலும் கட்டுப்பாடுகளை இறுக்குவதற்கு அரசு முயற்சித்து வருகிறது. புதிய தடுப்பூசிப் பாஸ் முறையை அமுல்செய்வதற்கான சட்ட மூலத்தை அரசு நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருக்கிறது. 

ஆனால் எதிர்பாராத விதமாக நாட்டின் வலது சாரிகளது எதிர்ப்பினால் நாடாளுமன்றத்தில் நேற்றுக் காரசாரமான வாதங்கள் ஏற்பட்டுப் பிரேரணை மீதான விவாதம் இரண்டு முறை இடைநிறுத்தப்பட நேர்ந்திருக்கிறது. தடுப்பூசி ஏற்றாதவர்களை விமர்சித்து மக்ரோன் அளித்துள்ள செவ்வி நாடாளுமன்றத்தில் மேலும் வாதப்பிரதிவாதங்களைத் தோற்றுவித்துள்ளது.
 
நாட்டில் அதிபர் தேர்தல் நெருங்குவதால் சுகாதாரப் பாதுகாப்புத் தொடர்பான விவகாரங்களிலும் வாக்கு அரசியல் செல்வாக்கே மேலெழுந்து வருவதை அவதானிக்க முடிகிறது.
Previous Post Next Post