ஜேர்மனிக்கான குழாய் வழி எரிவாயு விநியோகத்தை நிறுத்தியது ரஷ்யா!

உக்ரைன் - ரஷ்யப் போர் காரணமாக ஜேர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் கடும் எரிவாயு பற்றாக்குறைய எதிர்கொண்டுள்ள நிலையில் ஜேர்மனிக்கு நோர்ட் ஸ்ட்ரீம்-1 (Nord Stream 1) குழாய் வழித்தடம் வழியாக மேற்கொண்டு வரும் எரிவாயு விநியோகத்தை ரஷ்யா காலவரையின்றி நிறுத்தியுள்ளது.

ஏற்கெனவே, நோர்ட் ஸ்ட்ரீம்-1 குழாய் வழித்தடம் வழியாக ஜேர்மனிக்கு வெறும் 20 சதவீத எரிவாயு விநியோகத்தை மட்டுமே ரஷ்யா செய்து வந்த நிலையில், தற்போது அது முற்றிலுமாக காலவரையின்றி நிறுத்தப்பட்டுள்ளது ஜேர்மனிக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக எரிவாயு விநியோகம் நிறுத்தப்படுவதாக ரஷ்யா கூறினாலும், உக்ரைன் போா் விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகளுக்கு அரசியல் நெருக்கடி கொடுக்கும் வகையில் எரிவாயு விநியோகத்தை ரஷ்யா நிறுத்துவதாக ஐரோப்பிய நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன.

ரஷ்யா பகுதியில் உள்ள நோர்ட் ஸ்ட்ரீம்-1 வழித்தடத்தின் போா்டோவயா அழுத்த நிலையத்தில், 4 இடங்களில் எண்ணெய் கசிவது கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலையில் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அந்த கசிவுகளை முழுமையாக நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வரை, நோர்ட் ஸ்ட்ரீம் குழாய் வழித்தடம் வழியாக எரிவாயு விநியோகிக்க முடியாத நிலை உள்ளது.

எனவே, அந்தக் குழாய் மூலம் ஜேர்மனிக்கு எரிவாயு விநியோகிக்கப்படுவது காலவரையின்றி நிறுத்தி வைக்கப்படுகிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அந்த நாட்டின் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் திகதி படையெடுத்தது. இதனை கண்டிக்கும் வகையில் ரஷ்யா மீது அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் மிகக் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன.

இந்தச் சூழலில், ஐரோப்பிய நாடுகளுக்கான எரிவாயு விநியோகத்தை ரஷ்யா தொடர்ந்து குறைத்து வருகிறது.

நோர்ட் ஸ்ட்ரீம்-1 வழித் தடம் வழியாக ஜொ்மனிக்கு எரிவாயு விநியோகிப்பதை ரஷ்யா கடந்த ஜூன் மாத மத்தியில் குறைக்கத் தொடங்கியது. அந்த வழித்தடத்தின் அழுத்த நிலையத்தில் பயன்படுத்தப்பட்டு வந்த கருவி பராமரிப்பு பணிகளுக்காக கனடா அனுப்பப்பட்டுள்ளதாகவும் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார தடைகள் காரணமாக அதனை மீண்டும் தங்கள் நாட்டுக்கு கொண்டு வர முடியாததால் எரிவாயு விநியோகத்தைக் குறைப்பதாக ரஷ்யா கூறியது.

எனினும், சிறப்பு அனுமதியுடன் அந்த டா்பைன் ரஷ்யா கொண்டு செல்லப்பட்ட பிறகும், தொழில்நுட்ப கோளாறுகளைக் காரணம் காட்டி நோர்ட் ஸ்ட்ரீம்-1 வழியான எரிவாயு விநியோகத்தை ரஷ்யா படிப்படியாகக் குறைத்து வந்தது.

இறுதியாக, அந்த எரிவாயு வழித்தடத்தின் முழு திறனில் 20 சதவீதம் மட்டுமே எரிவாயு விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்தச் சூழலில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நோர்ட் ஸ்ட்ரீம்-1 வழித்தடத்தில் எரிவாயு விநியோகம் வெள்ளிக்கிழமை இரவு வரை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

இப்போது எண்ணெய்க் கசிவு இருப்பதால் எரிவாயு விநியோகம் காலவரையின்றி நிறுத்திவைக்கப்படுவதாக ரஷ்யா எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post