பாரிஸில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் 12 வயது சிறுமியின் உடல் சூட்கேஸில் மீட்பு!!

பாரிஸ் நகரில் 19 ஆவது நிர்வாகப் பிரிவில் பன்னிரெண்டு வயதுடைய சிறுமி ஒருத்தியின் உடல் சூட்கேஸ் ஒன்றில் இருந்து மீட்கப்பட்டிருக்கிறது.

நகரில் rue d'Hautpoul தெருப் பகுதியில் சிறுமியின் உடல் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சூட்கேஸ் ஒன்றினுள் சுருண்ட நிலையில் காணப்பட்டது என்று முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறுமி கல்லூரியில் இருந்து திரும்பி வராததை அடுத்து அவர் காணாமற்போனமை பற்றிய தகவலைத் தந்தையார் நேற்று வெள்ளிக்கிழமை மாலை பொலீஸாருக்கு அறிவித்திருந்தார்.

பொலீஸார் உடனடியாகத் தேடுதல் மற்றும் தகவல் சேகரிக்கின்ற அவசர பணியை முடுக்கி விட்டனர்.

சிறுமி வசிக்கின்ற கட்டடத்தின் கீழ் தளத்தில் சந்தேகத்துக்கு இடமான நடமாட்டங்களைக் கண்காணிப்புக் கமெராக்கள் பதிவு செய்திருந்தன.

கீழ் தளத்தில் பெண் ஒருவர் பெரிய சூட்கேஸ்(valise) ஒன்றினைச் சிரமப்பட்டு இழுத்துச் செல்வதைக் கண்காணிப்புக் கமெரா காட்சிகள் காட்டின. வீட்டில் இருந்து சில வீதிகள் கடந்து ஓர் இடத்தில் அதே சூட்கேஸில் இருந்தே சிறுமியின் உடல் நேற்றிரவு கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டது என்று பாரிஸ் செய்தி ஊடகங்கள் தெரிவித்தன.

சிறுமியின் உடல் கழுத்தில் காயங்களுடன் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் இருந்துள்ளது. அதேசமயம் "1" மற்றும் "0" ஆகிய இலக்கங்கள் உடல் மீது காணப்பட்டன என்று கூறப்படுகிறது. இந்த இலக்கங்களின் மர்மம் என்ன என்பது உடனடியாகத் தெரியவரவில்லை.

பாரிஸ் குற்றத் தடுப்புப் பொலீஸார் கடத்தல் மற்றும் கொலை தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சூட்கேஸுடன் காணப்பட்டவர் எனக் கூறப்படும் இளம் பெண் இன்று சனிக்கிழமை காலை பாரிஸ் புறநகரான Bois-Colombes (Hauts-de-Seine) பகுதியில் வைத்துக் கைது செய்யப்பட்டார். சந்தேகத்துக்குரிய அந்தப் பெண் யார் என்ற விவரம் வெளியிடப்படவில்லை. அவருடன் மேலும் மூவர் இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருகின்றனர் என்று செய்தி வெளியாகியுள்ளது.
Previous Post Next Post