வெளிநாட்டு மோகத்தால் யாழ்.இளைஞர்களுக்கு இந்தியாவில் நடந்த துயரம்!

முகவர்கள் ஊடாக சட்டவிரோதமான முறையில் ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்ல முற்பட்டு ஏமாற்றப்பட்ட 140 பேர் தென்னிந்தியாவில் நிர்க்கதியாக வாழ்கின்றனர்.

கடந்த வருடத்தில் மட்டும் முகவர்களால் ஏமாற்றப்பட்டவர்களின் தொகை இது என வடக்குக் கிழக்கு சமூக நல்லிணக்க அமைப்பு தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு கனவில் உள்ளவர்களைக் குறிவைத்துச் செயற்படும் வெளிநாட்டு முகவர்களிடம் ஏமாற வேண்டாம் என்றும் குறித்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த அமைப்பின் தலைவர் தி.அருட்செல்வம் தெரிவிக்கையில்,
தமிழகத்தின் முகாம்களிலும் வெளியிலும் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் பேர் வசிக்கிறார்கள்.

இதில் சொந்த இடத்துக்கு திரும்பி வர விரும்பினாலும் சட்டச் சிக்கல்கள் காரணமாக திரும்பி வர முடியாமல் உள்ளவர்கள் தொடர்பில் எமது அமைப்பு கவனம் செலுத்தி வருகின்றது.

நாம் திரட்டிய தகவலின்படி வெளிநாடு செல்ல முற்பட்டு முகவர்களால் ஏமாற்றப்பட்ட 140 பேர் தென்னிந்தியாவில் நிர்க்கதியான நிலையில் உள்ளனர். இவர்கள் கடந்த வருடம் ஏமாற்றப்பட்டவர்கள்.

இந்தியா ஊடாக ஐரோப்பிய நாடுகளுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறியே இவர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர். தமிழகத்திலும் அயல் மாநிலம் ஒன்றிலும் இவர்கள் அழைத்து வரப்பட்டு நிர்க்கதியாக்கப்பட்டனர். 6 தொடக்கம் 25 இலட்சம் ரூபாய் வரையான பணத்தை முகவர்கள் பெற்றுள்ளனர்.

இவ்வாறு ஏமாற்றப்பட்டவர்கள் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், புத்தளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.

தற்போது குடிவரவு-குடியகழ்வுச் சட்டங்கள் கடுமையாக்கப்பட்டுள்ளது. எனவே இவ்வாறான முகவர்களிடம் ஏமாற வேண்டாம். கடந்த 3 மாதத்தில் ஏமாற்றப்பட்ட 15 போரை நாட்டுக்கு அழைத்து வந்துள்ளோம் என்றார்.

Previous Post Next Post