அமெரிக்கா – சீனா முறுகல் முற்றியது! தூதரகங்களை மூட அதிரடி உத்தரவு!!

சீன தூதரகத்தை மூடுவதற்கான அமெரிக்காவின் நடவடிக்கைக்கு பதிலடியாக சீனாவிலுள்ள அமெரிக்க தூதரகத்தை மூட சீனா உத்தரவு பிறப்பித்துள்ளது.

உலக அளவில் கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் முதலிடத்தில் இருக்கும் அமெரிக்காஇ இந்த வைரசை சீனா வேண்டுமென்றே உலக நாடுகளுக்கு பரப்பியதாக தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.

வெறும் குற்றச்சாட்டுடன் நிற்காமல் சீனாவுக்கு எதிராக அமெரிக்கா தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் உள்ள சீன தூதரகத்தை உடனடியாக மூட ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாகம் திடீரென உத்தரவு பிறப்பித்தது.

அமெரிக்காவின் அறிவு சார் சொத்துகள் மற்றும் தனியார் தகவல்களை பாதுகாப்பதை நோக்கமாக கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ட்ரம்ப் நிர்வாகம் தெரிவித்தது.

இதற்கிடையே அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் சீன தூதரக அலுவலகத்தில் சீன விஞ்ஞானி டாங் ஷுவான் உள்பட அந்த நாட்டை சேர்ந்த 4 பேர் பதுங்கியுள்ளதாகவும் அவர்களுக்கும் சீன இராணுவத்துக்கும் நெருங்கிய தொடர்புள்ளதாகவும் அமெரிக்கா நீதித்துறை தெரிவித்தது.

அதனைத்தொடர்ந்து விசா முறைகேடு தொடர்பாக அவர்கள் 4 பேரும் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர்களில் 3 பேரை அமெரிக்க மத்திய புலனாய்வு பொலிசார் கைது செய்த நிலையில்இ விஞ்ஞானி டாங் ஷுவான் தலைமறைவாகியுள்ளார்.

இவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமானால் அவர்களுக்கு தலா 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே அமெரிக்காவில் உள்ள மேலும் சில சீன தூதரகங்களை மூட உத்தரவிட வாய்ப்பு உள்ளதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார். தூதரக ரீதியிலான இந்த பிரச்சினையை அமெரிக்கா மற்றும் சீனா இடையே மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் தூதரக மூடல் விவகாரத்தில் அமெரிக்காவுக்கு பதிலடி தரும் விதமாக சீனாவின் செங்டு நகரில் உள்ள அமெரிக்க தூதரகத்தை மூட சீனா உத்தரவிட்டுள்ளது.

சீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள சிச்சுவான் மாகாணத்தின் தலைநகரான செங்டுவில் இயங்கி வரும் அமெரிக்க துணைத் தூதரகம் செயல்படுவதற்கான தனது ஒப்புதலை வாபஸ் பெறும் முடிவை சீன அரசு நேற்று அறிவித்தது.

இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

ஹூஸ்டனில் உள்ள சீன தூதரகத்தை மூட வேண்டும் என்று திடீரென கோரி அமெரிக்கா ஒருதலைப்பட்ச ஆத்திரமூட்டலை தொடங்கியது. அமெரிக்காவின் நடவடிக்கை சர்வதேச சட்டம் சர்வதேச உறவுகளில் அடிப்படை விதிமுறைகள் மற்றும் சீன-அமெரிக்க தூதரக மாநாட்டின் விதிமுறைகளை கடுமையாக்கி உள்ளது. இது சீன- அமெரிக்க உறவுகளைக் கடுமையாகப் பாதித்தது. தற்போது சீனா எடுத்துள்ள இந்த நடவடிக்கை அமெரிக்காவின் நியாயமற்ற செயலுக்கு முறையான மற்றும் தேவையான பதிலாகும்.

இது சர்வதேச சட்டம் சர்வதேச உறவுகளின் அடிப்படை விதிமுறைகள் மற்றும் வழக்கமான தூதரக நடைமுறைகளுடன் ஒத்துப் போகிறது.

சீன-அமெரிக்கா உறவுகளில் தற்போதைய நிலைமை சீனா பார்க்க விரும்புவதல்ல. இதற்கெல்லாம் அமெரிக்கா தான் பொறுப்பு. அமெரிக்காவின் தவறான முடிவை உடனடியாக திரும்பப் பெறவும் இருதரப்பு உறவை மீண்டும் நல்ல பாதையில் கொண்டு வருவதற்கு தேவையான நிலைமைகளை உருவாக்கவும் நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம் என அதில் கூறப்பட்டுள்ளது.
Previous Post Next Post