தடுப்பூசி ஏற்றிக் கொண்டதன் பின் கொரோனா தொற்றாதா?


  • குமாரதாஸன், பாரிஸ்.
கொரோனா வைரஸ் தடுப்பூசியை ஒரு முறை ஏற்றிவிட்டால் பிறகு வைரஸ் தொற்றாது என்ற திடமான நம்பிக்கை அனைவரிடமும் உள்ளது. அதன்பின்னர் மாஸ்க் அணியாமல் சுதந்திரமாகச் சுற்றித் திரியலாம் என்று எண்ணும் பலரும்கூட இருக்கிறார்கள். இவை இரண்டுமே தப்புக் கணக்குகள் என்கின்றனர் தொற்றுநோயியலாளர்கள்.

தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டபின் தொற்று நோய்க்கு முந்திய பழைய வாழ்க்கைக்கு உடனே திரும்பி விட முடியாது. தடுப்பூசி ஏற்றிய பலர் மீண்டும் தொற்றுக்கு இலக்கானமை பற்றிய செய்திகள் உலகெங்கும் வெளியாகி வருகின்றன.
 
தடுப்பூசி பெற்றுக் கொண்ட ஒருவர் பின்வரும் காரணங்களால் மீண்டும் வைரஸ் தொற்றுக்கு ஆளாக முடியும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

*மாஸ்க் அணிதல், கைகளைக் கழுவுதல், சமூக இடைவெளி பேணுதல் போன்ற
சுகாதார அமைச்சின் முன்னெச்சரிக்கை ஒழுங்குகளைப் பின்பற்றாமல் நடப்பது-

*தடுப்பூசி தொடர்பாக மருத்துவர் தரும் ஆலோசனைகளைப் புறக்கணிப்பது -

*குறித்த தவணையில் இரண்டாவது தடுப்பூசியை ஏற்றத் தவறுதல் அல்லது
இரண்டாவது டோஸை ஏற்றாமல் விடுதல் -

*உடற்காப்பு சக்தி தூண்டப்படுவதில் ஏற்படும் தடை-

இத்தகைய காரணங்களால் ஒருவர் தடுப்பூசி ஏற்றிய பிறகும் தொற்றுக்கு உள்ளாக வாய்ப்புண்டு என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

தடுப்பூசி என்பது வைரஸின் முடிவு அல்ல அது வைரஸின் தீவிரமான தாக்கத்தில் இருந்து உடலுக்குப் பாதுகாப்பு வழங்குவது மட்டுமே. அது தொற்றைத் தடுக்காது. தொற்றுக்கு எதிராக உடற்காப்பு சக்திகளைத் தூண்டி மரணத்தில் இருந்து காப்பாற்றும். 

எனவே தடுப்பூசி ஏற்றிய அனைவரும் தொடர்ந்தும் தொற்றில் இருந்து தங்களைப் பாதுகாக்கும் நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டியது கட்டாயம்.

அதேவேளை, தடுப்பூசி ஏற்றியவர்கள் தொடர்ந்தும் வைரஸை ஏனையோருக்குப் பரப்பிக்கொண்டே இருப்பார்கள். ஊசி அதனைத் தடுக்காது.

தடுப்பூசி ஏற்றிய ஒருவரது உடலில் வைரஸ் கண்டுபிடிக்கப்படலாம். ஊசி ஏற்றிக்கொண்ட அடுத்த ஓரிரு நாட்களில் கூட தொற்று ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

ஆனால் ஊசி உடல் எதிர்ப்பு சக்தியைத் தூண்டி தொற்றின் தீவிரத்தைத் தணித்து விடுகின்றது. எனவே தடுப்பூசி போட்டுக் கொண்ட ஒருவரது உடலில் மீண்டும் சோதனை மூலம் வைரஸ் கண்டறியப்பட வாய்ப்பு உள்ளது. ஆனால் அவை வலுக்குறைந்த வைரஸாக இருக்கலாம்.
 
இதைவிட வைரஸ் தடுப்பூசிகளின் பயன்பெறும் காலத்தின் பின்னர் மீண்டும் ஒருவர் தொற்றுக்கு ஆளாக நேரிடலாம். தற்போது பயன்பாட்டில் உள்ள பைசர் பயோஎன்ரெக் போன்றவை ஆறு மாதங்கள் பாதுகாப்பு அளிக்கக் கூடியவை என்று உத்தரவாதம் தரப்பட்டுள்ளது.ஊசிகளின் உண்மையான வலு என்ன என்பதை அறிய இன்னமும் சில காலம் பொறுத்திருக்க வேண்டும்.

கொரோனா வைரஸும் அதன் திரிபுகளும் உலகின் எல்லாப் பகுதிகளில் இருந்தும் ஒரே சமயத்தில் மறைந்து விடப்போவதில்லை. அதேபோன்று உலக
மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் கிடைத்துவிடவும் போவதில்லை. 

எனவே அடுத்த சில வருடங்களுக்காவது எங்கோ ஒர் இடத்தில் வைரஸ் தொடர்ந்தும் பரவிக்கொண்டுதான் இருக்கப் போகின்றது.அதுவரை மாஸ்கும் எங்கள் வாழ்க்கையோடு பயணிக்கப் போகிறது.
Previous Post Next Post