பிரான்ஸில் சதிப் புரட்சி? எலிஸேயின் அதிகாரத்தைக் கைப்பற்றிய கேணல்! வைரலாகும் வீடியோ!!

போலிச் செய்திகளும் விடியோக்களும் பரவலாகப் புழக்கத்துக்கு வந்துள்ள ஒரு காலச் சூழ்நிலையில் சமூக வலை ஊடகங்களின் பொறுப்பற்ற
தன்மை கடும் விமர்சனங்களை எதிர்கொள்கிறது.

பிரான்ஸில் ஆட்சிக் கவிழ்ப்பு நடந்துள்ளதாகக் காட்டும் ஒரு ஃபேஸ் புக் ரீல்ஸ் வீடியோ அது வெளியாகிய சிறிது நேரத்துக்குள்ளேயே பல மில்லியன் பார்வைகளைப் பெற்றுப் பெரும் பரபரப்பை உண்டுபண்ணியிருக்கிறது.
எலிஸே அரண்மனை அருகே ஒலிவாங்கியுடன் தோன்றும் செய்தியாளர் ஒருவர், ஆட்சிக் கவிழ்ப்பு நடந்துள்ளது என்றும்
கேணல் ஒருவர் எலிஸேயின் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளார் என்றும் பல தகவல்களைப் பரபரப்பாக அறிவிக்கிறார்.

இதற்காகப் ஃபேஸ்புக் நிர்வாகத்தை நேரடியாகக் கண்டித்திருக்கின்றார் மக்ரோன். அந்த வீடியோவை நீக்குமாறு பிரான்ஸின் அரசுத் தலைமை விடுத்த கோரிக்கையைப் ஃபேஸ்புக் நிர்வாகம் ஏற்றுக் கொள்ளவில்லை. அது "தங்களது சேவை விதி முறைகள் எதனையும் மீறவில்லை" (This does not violate our terms of service.') என்று பிரான்ஸின் அரசுத் தலைமைக்கு நிர்வாகம் பதிலளித்திருக்கிறது என்ற தகவலை மக்ரோன் பொது நிகழ்வு ஒன்றில் நேற்று வெளியிட்டிருக்கிறார்.

அதிபர் மக்ரோன் போதைப் பொருள் மாபியாக்கள் தலைவிரித்தாடுகின்ற மார்செய் நகரத்துக்கு நேற்று விஜயம் செய்தார். அங்கு பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்ட சமயத்திலேயே சமூக ஊடகங்களது பொறுப்பின்மையைக் காட்டுகின்ற இத் தகவலை வெளியிட்டார்.

ஒரு நாட்டின் அதிகாரம் மிக்க அரசுத் தலைவர் கேட்டுக் கொண்ட பிறகும் போலி வீடியோ ஒன்றை நீக்குவதற்கு மறுக்கின்ற சமூக ஊடகம், ஜனநாயகத்தைக் கேலி செய்கிறது.இந்த நாட்டு மக்களைப் பரிகசிக்கின்றது
என்ற சாரப்பட அவர் ஃபேஸ்புக் நிர்வாகத்தின் மீது குற்றம் சுமத்தினார்.

ஆட்சிக் கவிழ்ப்பு வீடியோவை அசல் என நம்பிய ஆபிரிக்க நாட்டு அரசுப் பிரமுகர் ஒருவர், உடனடியாகவே மக்ரோனுக்கு செய்தி அனுப்பியிருக்கிறார்.
"ஜனாதிபதி அவர்களே உங்கள் நாட்டில் என்ன நடக்கிறது..? நான் மிகவும் கவலையடைகிறேன்.. "

-இவ்வாறு ஒரு நாட்டின் தலைவர் தன்னை விசாரிக்கின்ற அளவுக்கு நிலைமை போய் விட்டது என்று நொந்துகொண்டார் மக்ரோன்.

Previous Post Next Post