பிரான்ஸில் ஆறு வயதிலிருந்து குழந்தைகள் மாஸ்க் அணிதல் கட்டாயமாகிறது!


  • குமாரதாஸன். பாரிஸ்.
கொரோனா வைரஸின் ஒமெக்ரோன் திரிபு அதிகம் குழந்தைகளையும் பீடிப்பதால் மாஸ்க் அணிய வேண்டிய வயது எல்லை 11 இல் இருந்து ஆறாகக் குறைக்கப்பட்டிருக்கிறது.

பிரான்ஸில் சில பொது இடங்களிலும் போக்குவரத்துகளிலும் ஆறு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் மாஸ்க் அணிய வேண்டும் என்ற விதிகளை அரசிதழ் (Journal official) வெளியிட்டுள்ளது.

அதன்படி விளையாட்டுத் திடல்கள், நூலகங்கள், வழிபாட்டு இடங்கள், மூடிய சந்தைகள், பொதுப் போக்குவரத்துகள் போன்ற இடங்களில் குழந்தைகள் மாஸ்க் அணிந்திருப்பது கட்டாயமாகும்.

மாவட்டங்களின் தொற்று நிலைமைக்கு ஏற்ப அந்தந்த இடங்களில் இந்த விதிகள் நாளை திங்கட்கிழமை முதல் இறுக்கமாகப் பின்பற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

நான்காவது நாளாக ஒரு நாள் தொற்று எண்ணிக்கை இரண்டு லட்சங்களைத் தாண்டியிருக்கிறது. நேற்றுமாலை வரை யான 24 மணி நேரங்களில் இரண்டு லட்சத்துப் 19 ஆயிரம் (219,000) புதிய தொற்றுக்கள் பதிவாகியிருக்கின்றன.

இதேவேளை, பொதுவாகப் பரவுகின்ற வைரஸ் தொற்று நோயாகிய "இன்புளுவென்சா" எனப்படும் சளிக் காய்சல் கிருமியும் கொரோனா வைரஸும் இணைந்த (influenza and coronavirus) இரட்டைத் தொற்றுக்கு இலக்காகிய பெண் ஒருவரைத் தாங்கள் முதல் முறையாகப் பரிசோதனையில் அடையாளம் கண்டுள்ளனர் என்ற தகவலை இஸ்ரேலிய மருத்துவ நிபுணர்கள் வெளியிட்டுள்ளனர்.  அந்த இரட்டைத் தொற்றை அவர்கள் "ஃபுளுரோனா" (flurona) என்று அழைக்கின்றனர். 

கர்ப்பிணியான இளம் பெண் ஒருவரே இரட்டை வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளார். அவர் கொரோனா தடுப்பூசி எதனையும் பெற்றுக்கொள்ளாதவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு ஒரே சமயத்தில் இரண்டு வெவ்வேறு வைரஸ் தொற்றுக்களுக்கு இலக்காகுவோர் மோசமான உயிராபத்தை எதிர்கொள்கின்றனரா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. 

தற்சமயம் பெரும் எண்ணிக்கையான தொற்றுக்களுக்குக் காரணமான ஒமெக்ரோன் திரிபு முன்னைய திரிபுக்களைப் போன்று சுவாசப் பைகளைச் சேதப்படுத்துவது குறைவாகவே அவதானிக்கப்பட்டுள்ளது என்பதைப் பூர்வாங்க ஆய்வுகள் வெளிப்படுத்தி உள்ளன. 

மூக்கு வடிதல், தலையிடி போன்ற சாதாரண அறிகுறிகளே ஒமெக்ரோன் தொற்றாளர்களிடம் அதிகம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Previous Post Next Post