யாழ்ப்பாணத்தில் மேலும் எட்டுப் பேருக்குக் கொரோனா உறுதியாகியது!

யாழ்ப்பாணத்தில் மேலும் 8 பேருக்கு கோரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள 14 பேருக்கு இன்று இரண்டாவது தடவையாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 8 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்மூலம் யாழ்ப்பாணத்தில் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் 15ஆக அதிகரித்துள்ளது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் இவர்களுக்கு கோரோனா உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அரியாலை பகுதியில் உள்ள தேவாலயத்தில் கடந்த மார்ச் மாதம் 15ஆம் திகதி ஆராதனை நடத்திய சுவிஸ் போதகரோடு கூடிய அளவில் தொடர்புடைய 20 பேர் பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்திலில் கடந்த மார்ச் மாதம் 23ஆம் திகதி தங்கவைக்கப்பட்டனர்.

அவர்கள் அனைவருக்கும் கடந்த ஏப்ரல் முதலாம், மூன்றாம் திகதிகளில் முதல்கட்டப் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. அதன்போது மானிப்பாயைச் சேர்ந்த போதகர் ஒருவர் உள்பட 6 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு வெலிகந்த ஆதார வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

இன்று மிகுதியாக இருந்த 14 பேருக்கு இரண்டாம் கட்ட பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 8 பேருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

முழங்காவில் தனிமைப்படுத்தல் நிலையத்தில்
4 பேருக்கு கொரோனாத் தொற்று!

இதேவேளை யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் இன்று 24 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டதில் 12 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்மூலம் நாட்டில் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 231ஆக உயர்வடைந்துள்ளது.

யாழ்ப்பாணம் பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள 14 பேரின் மாதிரிகள் ஆய்வுகூடப் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன. அவர்களில் 8 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.

அத்துடன் முழங்காவில் கடற்படை முகாமில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள ராகமையைச் சேர்ந்த 8 பேரின் மாதிரிகளும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன.
அவர்களில் 4 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது. மேலும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தவர் உள்பட 12 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
Previous Post Next Post