கிளிநொச்சியில் மேலும் 5 பேருக்கு கொரோனா – கே.கே.எஸ் கடற்படை முகாமில் 7 பேர் பாதிப்பு!எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
கிளிநொச்சி மாவட்டத்தில் 5 பேருக்கும் காங்கேசன்துறை கடற்படை முகாமில் பணியாற்றும் சிப்பாய்கள் 7 பேருக்கும் கொரோனா தொற்று உள்ளமை இன்று கண்டறியப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.

கிளிநொச்சி பாரதிபுரத்தில் வசிப்பவரும் 55ஆம் கட்டையில் உள்ள ஒயில் கடையில் பணியாற்றும் முதியவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் உள்ளமை நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை கண்டறியப்பட்டது.

அதனால் அவருடைய குடும்பத்தினர் மற்றும் அவருடன் பணியாற்றியோர் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களது மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டது.

அவர்களில் வயோதிபரின் மருமகன் உறவுமுறை ஒருவருக்கும் வயோதிபருடன் ஒயில் கடையில் பணியாற்றும் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று உறுதிப்படுத்தப்பட்டது.

நாட்டில் கோரோனா வைரஸ் பரவல் அதிகமாகக் காணப்படும் மேல் மாகாணத்துக்குச் சென்று குடிதண்ணீர் போத்தல்களை எடுத்து வந்து கிளிநொச்சி மாவட்டத்தில் விநியோகிக்கும் முகவர் நிறுவனத்தைச் சேர்ந்த மூன்று பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வயோதிபருக்கு கொரோனா தொற்று உள்ளமை பிசிஆர் பரிசோதனையில் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை மாலை உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவரது கடையில் பாரவூர்திகள் மற்றும் டிப்பர் வாகனங்களின் சாரதிகள், உதவியாளர்கள் ஒயில் வாங்குவதற்கு வந்து செல்கின்றனர். அவர்களில் ஒருவரால் வயோதிபருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது.

இந்த நிலையில் குடிதண்ணீர் போத்தல்களை மேல் மாகாணத்திலிருந்து எடுத்து வந்து கிளிநொச்சியில் விநியோகிக்கும் அந்த மாவட்டத்தில் வசிக்கும் மூவர், வயோதிபர் பணியாற்றும் ஒயில் கடைக்கு அருகில் கடைவைத்திருந்துள்ளனர்.

அவர்கள் மேல் மாகாணத்துக்குச் சென்றிருந்த நிலையில் நேற்று மீள அழைக்கப்பட்டு மாதிரிகள் பெறப்பட்டன. அவர்கள் மூவருக்கு கொரோானா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்றைய பிசிஆர் பரிசோதனைகள் அனைத்தும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் முன்னெடுக்கப்பட்டன.

காங்கேசன்துறை கடற்படை முகாமில் கடமையாற்றும் சிப்பாய்கள் 7 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 3 நாள்களில் 10 சிப்பாய்களுக்கு கோரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
Previous Post Next Post