20 ஆவது ஆண்டு நிறைவை சிறப்புறக் கொண்டாடியது வலம்புரிப் பத்திரிகை! (படங்கள்)

இருபது ஆண்டு காலத்தை நிறைவு செய்து யாழ்.மண்ணில் ஆழமான ஒரு தடத்தைப் பதித்து நிற்கின்றது வலம்புரிப் பத்திரிகை.

நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை தனது 20 ஆவது நிறைவு விழாவை பிற்பகல் 3 மணியளவில் நல்லூர் துர்க்காதேவி மணி மண்படத்தில் மிகவும் சிறப்பாக நடாத்தியது வலம்புரி.

இந் நிகழ்வில் சமயத் தலைவர்களின் ஆசிகளாலும் கல்விமான்களின் புகழாரத்தாலும் நிரம்பி வழிந்தது மணி மண்டபம்.

தடைகள் பல தாண்டி நடுவு நிலை தவறாது நன்னெறி காத்து நிற்கின்றது வலம்புரிப் பத்திரிகை என்று சொன்னால் அது மிகையாகாது.

அந்தவகையில், நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக பேராசிரியர் ப. சிவநாதன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக உயர்பட்டப் படிப்புகள் பீடாதிபதி பேராசிரியர் கு. மிகுந்தன், யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி, ஓய்வுநிலை அதிபர் திருமதி பி. எஃப். சின்னத்துரை ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆசியுரைகளை நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தரதேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், வீணாகான குருபீடாதிபதி சிவஸ்ரீ சபா. வாசுதேவக் குருக்கள், அருட்திரு. ரூபன் மரியாம்பிள்ளை, சின்மயாமிசன் வதிவிட ஆசாரியார் சுவாமி சிதாகாசானந்தா, கலாநிதி ஆறு. திருமுருகன், தென்னிந்திய திருச்சபை முன்னாள் பேராயர் அதிவண கலாநிதி எஸ். ஜெபநேசன், யாழ். கிளிநொச்சி மாவட்ட உலமா சபைத் தலைவர் அல்ஹாஜ் ஏ.எம். ஏ. அஸீஸ் மௌலவி ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்வுகளை செந்தமிழ்ச்சொல்லருவி ச.லலீசன் நெறிப்படுத்தினார். வலம்புரி நாளிதழின் பிரதம ஆசிரியர் ந.விஜயசுந்தரம் சிறப்புரை ஆற்றினார்.

வலம்புரியின் ஆரம்பகால நிறுவுநர்களாகிய சி.வெற்றிவேலாயுதம், ந.விஜயசுந்தரம், க. திருமாலழகன் ஆகியோர் கம்பவாரிதி இ.ஜெயராஜினால் பொன்னாடை போர்த்தி மதிப்பளிக்கப்பட்டனர்.

நிகழ்வின் தொடக்கத்தில் பொன்னாலை சந்திரபரத கலாலய மாணவிகளின் வரவேற்பு நடனம் இடம்பெற்றது. வலம்புரி முகாமையாளர் மாவை. நா கஜேந்திரன் நன்றியுரை ஆற்றினார்.

இருபதாண்டுகாலத்தில் வலம்புரிக்குத் தொடர்ச்சியாக எழுத்துப் பணியாற்றியவர்கள் என்ற நிலையில் நீர்வைமணி கு.தியாகராஜக் குருக்கள், மு.வாமதேவன், பேராசிரியர் கு.மிகுந்தன், வைத்தியநிபுணர் சி. சிவன்சுதன், சித்த வைத்திய விரிவுரையாளர் டாக்டர் திருமதி விவியன் சத்தியசீலன், கலாநிதி க. தவலிங்கம், செ.மதுசூதனன், கே.வி. குணசேகரம், ஐயம்பிள்ளை பொன்னம்பலம், மரியநாயகம் பிரான்சிஸ்க் ஆகியோருக்கும் மற்றும் யாழ்ப்பாண விஞ்ஞானச் சங்கத்தின் பிரிவு ஏ இற்கும் வலம்புரி விருது வழங்கப்பட்டது.

இவர்களைவிட வணிகப்பெருமக்கள் மற்றும் வலம்புரியின் வளர்ச்சிக்கு உதவியோர் எனப் பலர் வலம்புரி விருது வழங்கி மதிப்பளிக்கப்பட்டனர்.
Previous Post Next Post