யாழில் தனியார் பேருந்து நடத்துநர் மீது கத்திக்குத்து தாக்குதல்!

யாழ்ப்பாணம். கோண்டாவில் பகுதியில் சேவையில் ஈடுபட்ட தனியார் பேருந்தை வழிமறித்த சிலர், அதன் நடத்துனரை நையப்புடைத்து, கத்தியால் குத்தியுள்ளனர்.

தனியார் பேருந்து சேவையை தொடங்கும் போது, யாழ் நகரில் பேருந்தில் ஏறிய இரண்டு மாணவிகளுடன், நடத்துனர் முறையற்ற விதத்தில் நடந்ததால் கோபமடைந்த சகோதரர்கள் இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக பொலிசாரின் விசாரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து வசாவிளானுக்கு பயணித்த தனியார் பேருந்து நேற்று (20) கோண்டாவில் பகுதியில் வழிமறிக்கப்பட்டது. இளைஞர்கள் சிலர் பேருந்தை வழிமறித்து, நடத்துனரை கீழே இறக்கி நையப்புடைத்தனர். அவரது கையிலும் கத்திக்குத்து விழுந்தது.

அவர்கள் பேருந்துக்கோ, வேறு யாருக்குமோ தாக்குதல் நடத்தவில்லை.

நடத்துனர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்து கோப்பாய் பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்த போது, யாழ் நகரில் இருந்து பேருந்து பயணத்தை ஆரம்பித்த போது, இரண்டு பாடசாலை மாணவிகளுடன் நடத்துனர் முறையற்ற விதமாக நடந்து கொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சுண்டுக்குளியிலுள்ள பிரபல பாடசாலையொன்றில் உயர்தரத்தில் கல்வி பயிலும் இரண்டு மாணவிகள், பாடசாலை முடிந்து வீடு திரும்புவதற்காக யாழ் நகரில் தனியார் பேருந்தொன்றில் ஏறியுள்ளனர். அருகில் இறங்குபவர்கள் ஆசனங்களில் அமராமல், எழுந்து நிற்கும்படி நடத்துனர் கூறி, மாணவிகளை கீழே இறங்கி நின்றுவிட்டு, பேருந்து புறப்படும் போது ஏறுமாறு கடும் தொனியில் கூறியுள்ளார்.

இதனால் மாணவிகளுக்கும் நடத்துனருக்குமிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக, மாணவிகள் பேருந்தில் ஏறியிருந்த பின் ஓரிருமுறை கீழே இறங்கி சென்று வந்துள்ளனர். பேருந்தில் ஏசி போடப்பட்டுள்ளது என குறிப்பிட்ட நடத்துனர், “ரூமூக்கு போய் வருவதை போல போய் வருகிறீர்கள்“ என இரட்டை அர்த்தம் தொனிக்கும் விதமாக, பேருந்துக்குள் ஏனைய பயணிகளின் முன்பாக தம்மை திட்டியதாகவும் மாணவிகளால் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இறுதியில் மணவிகளை கீழே இறக்கிய பின்னர், பேருந்து பயணத்தை ஆரம்பித்துள்ளது. அந்த சம்பவத்தையடுத்து, மாணவியொருவர் அழுதபடியே தொலைபேசியில் தமது வீட்டுக்கு தகவல் வழங்கியுள்ளார். நடத்துனர், பயணிகளின் முன்பாக இரட்டை அர்த்தம் தொனிக்கும் விதமாக பேசியதையும் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த மாணவியின் சகோதரர்களும், அவர்களின் நண்பர்கள் சிலரும் கோண்டாவிலில் பேருந்தை வழிமறித்து, இந்த சம்பவத்தை குறிப்பிட்டு நடத்துனரை நையப்புடைத்துள்ளனர்.

கோப்பாய் பொலிசார் தாக்குதலை நடத்திய இளைஞர்களின் வீட்டுக்கு சென்ற போது, அவர்கள் தலைமறைவாகி விட்டனர்.

இதையடுத்து, நேற்று இரவு தாக்குதலை நடத்தியவர்களின் சகோதரியான- யாழ் நகரில் நடத்துனரால் முறையற்ற விதமாக நடத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்ட மாணவியை- கோப்பாய் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். பின்னர் அந்த மாணவி கைது செய்யப்பட்டுள்ளார்.
Previous Post Next Post