யாழில் பாபாவுக்கு மதுபானப் படையல்! சைவ மகா சபை கண்டனம்!!

யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் உள்ள ஈழத்து சீரடி சாய் பாபா ஆலயத்தில் நத்தார் தினத்தன்று மதுபானங்கள் படைத்து பூஜைகள் இடம்பெற்றுள்ளன.

இது தொடர்பிலான புகைப்படங்கள் இணையத்தளங்கள் மற்றும் சமூகவலைத்தளங்கள் ஊடாக வெளிச்சத்துக்கு வந்திருந்தது.

இச் செயற்பாட்டை கண்டித்துள்ள அகில இலங்கை சைவ மகா சபை, மது படைத்து வழிபாடு செய்யும் மோசமான, போலியான, வழிபாட்டு முறைமை ஒன்றை யாழில் அறிமுகம் செய்ய முனைபவர்களை எச்சரித்துள்ளதுடன், இந்த விநோத வழிபாட்டிடத்தை சைவத் தமிழர்கள் முற்றாகப் புறக்கணிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக அகில இலங்கை சைவ மகா சபை விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

சைவத் தமிழர்களால் பஞ்சமா பாதகங்களில் ஒன்றாக விதைந்து உரைக்கப்பட்ட மதுவை வழிபாட்டிடம் ஒன்றில் படைக்கும் காட்சி அண்மையில் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட நிலையில் அந்தச் செயற்பாடு முற்றிலும் சரியானது என்ற தோரணையில் அவ் வழிபாட்டிட நிர்வாகம் என்ற பெயரில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

மேற்படி தனிமனித வழிபாட்டு நிர்வாகம் சைவ சமய கடவுளரை நிந்திக்கும் தமது இந்த மோசமான செயற்பாடுகளை உடனடியாக நிறுத்த வேண்டும். பல் சமய பின்னணி கொண்ட இந்த தனிமனித வழிபாட்டு இடம் பண்டைய உண்மையான சைவ சமயத்திற்கு எதுவிதத்திலும் சம்பந்தம் இல்லாத நிலையில் சைவ சமய ஆலயம் போன்ற ஓர் மாயையை ஏற்படுத்த முனைவதையும் அவர்கள் நிறுத்த வேண்டும் என உண்மைச் சைவ சமயிகள் சார்பாக அகில இலங்கை சைவ மகா சபை கேட்டுக் கொள்கின்றது.  சைவ சமயிகள் மேற்படி நபர்கள் மீது அவதானமாக இருக்க வேண்டும்.

இந்தப் போலிகளுக்காக எமது தொன்மையான சைவ சமயத்தைப் பரிகசிக்கும் செயற்பாடுகளை மேற்கொள்ளாது நேர்மையான உள்ளத் தூய்மையுடன் செயற்பட்டு போலி வழிபாட்டு முறைமைகளை முற்று முழுதாக மறுதலித்து அவ்விடங்களிற்கு செல்வதையோ அச்செயற்பாடுகளுக்கு துணை போவதையோ கைவிட வேண்டும் என வேண்டிக்கொள்கின்றோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Previous Post Next Post