யாழில் வழிப்பறி சந்தேகநபரை கைது செய்ய முற்பட நஞ்சருந்தி தற்கொலை முயற்சி!

யாழ்ப்பாணத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற இரண்டு வழிப்பறிக் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் ஒருவரைப் பொலிஸார் கைது செய்ய முயற்சி செய்தனர்.

இந் நிலையில் கைது முயற்சியின் போது அவர் நஞ்சருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இதனால் அவர் உடனடியாக தெல்லிப்பளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

சுன்னாகம் பொலிஸ் பிரிவில் புன்னாலைக்கட்டுவன் மற்றும் உரும்பிராய்ப் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வழிப்பறிக் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் அடிப்படையில் கைது செய்ய முயற்சிக்கும் போதே அவர் நஞ்சருந்தியுள்ளார்.

பலாலி விமானப் படைத் தளத்தில் பணியாற்றும் அலுவலர் ஒருவர் தனது குடும்பத்தை அழைத்து வந்திருந்த நிலையில் அவர் அவர்களை யாழ்ப்பாணம் நகரில் பயணம் அனுப்பி வைப்பதற்காக இன்று அதிகாலை 4 மணிக்கு ஆட்டோவில் அழைத்து வந்துள்ளார்.

புன்னாலைக்கட்டுவன் பலாலி வீதியில் அவர்கள் பயணித்த ஆட்டோவை, மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் வழிமறித்துள்ளனர். மறைந்திருந்த அந்த மூவரும் முகத்தை மறைத்தவாறு வாளைக் காண்பித்து கொள்ளையடித்தனர்.

நான்கு பவுண் நகைகள் மற்றும் 10 ஆயிரம் ரூபாய் பணம் என்பன கொள்ளையிடப்பட்டதாக விமானப் படை அலுவலர் முறைப்பாடு வழங்கினார்.

அத்துடன் உரும்பிராய்ப் பகுதியில் பயணித்த ஒருவரிடம் ஆட்டோவில் வந்தவர்கள் கொள்ளையடித்துள்ளனர். அவரிடம் அலைபேசி, கைக்கடிகாரம் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

உரும்பிராய் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்பில் முறைப்பாட்டாளர் வழங்கிய அடையாளத்தின் அடிப்படையில் சந்தேகநபர் ஒருவரைத் தேடி உரும்பிராய் தோட்டப் பகுதிக்குப் பொலிஸார் தேடிச் சென்ற போது, சந்தேகநபர் தோட்டத்திலிருந்த ரவுண்டப் என்ற கிருமி நாசினியை அருந்தி தற்கொலைக்கு முயன்றார்.

அவர் உடனடியாக தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
சந்தேகநபர் பல கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் சிறைச்சாலை அதிகாரிகளின் பிடியிலிருந்து தப்பித்தவர்.

இரு கொள்ளைச் சம்பவங்களையும் ஒரே கும்பலே செய்திருக்க முடியும் எனச் சந்தேகிக்கப்படும் நிலையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன எனப் பொலிஸார் தெரிவித்தனர்.


Previous Post Next Post