முன்னாள் அமைச்சர் டெனீஸ்வரனின் வேட்புமனு நிராகரிப்பு! தகர்ந்தது நாடாளுமன்றக் கனவு!!

விடுதலை புலிகள் மக்கள் பேரவை சார்பில் வன்னி மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக முன்னாள் வடக்கு மாகாண அமைச்சர் பா.டெனீஸ்வரன் தாக்கல் செய்த வேட்புமனு தேர்தல் திணைக்களத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

வேட்பு மனுதாக்கல் செய்வதற்கான இறுதி நாளான இன்று விடுதலைபுலிகள் மக்கள் பேரவையின் சார்பில் போட்டியிடுவதற்காக முன்னாள் மாகாண அமைச்சர் பா.டெனீஸ்வரன் மற்றும் ஏனைய வேட்பாளர்கள் வவுனியா மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்து வேட்புமனுவினை தாக்கல் செய்திருந்தனர்.

இந்நிலையில் கட்சியின் பொதுசெயாலாளர் கையொப்பம் இடவேண்டிய இடத்தில் கையொப்பம் இடாமையினால் அவர்களது விண்ணப்பம் தேர்தல் திணைக்களத்தால் நிராகரிக்கபட்டுள்ளது.

வடக்கு மாகாணசபையின் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த டெனீஸ்வரன், முன்னாள் அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டின் தொடராக முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரின் கோரிக்கையின் அடிப்படையில் பதவியிலிருந்து விலகியிருந்தார்.

இருந்தபோதிலும் பின்னர் தன் மீது இழைக்கப்பட்டது அநீதி எனத் தெரிவித்து நீதிமன்றை நாடியிருந்தார். இருப்பினும் பின்னாளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடனான நெருக்கத்தினைக் குறைத்துக்கொண்ட அவர் முன்னாள் போராளிகள் அடங்கிய குழுவினருடன் இணைந்து சுயேட்சையாக நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்திருந்தார்.

அதன் தொடராக அவருடைய சுயேட்சைக் குழு வன்னி தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக வவுனியா தெரிவத்தாட்சி அலுவலர் அலுவலகத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தது.

இந் நிலையிலேயே பா.டெனீஸ்வரனின் சுயேட்சைக் குழுவின் வேட்புமனு தோ்தல் திணைக்களத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை வன்னி தேர்தல் தொகுதியில் 45 வேட்புமனுக்கள் ஏற்றுகொள்ளப்பட்டுள்ளதாகவும் 8 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் வவுனியா மாவட்ட அரச அதிபரும் தெரிவித்தாட்சி அலுவலருமான சமன் பந்துலசேன தெரிவித்தார்.

வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளும் பணி நிறைவடைந்த பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


Previous Post Next Post