கொரோனா தொற்றைப் பொருட்படுத்தாத பிரான்ஸ் மக்கள்! அரசு அதிரடி அறிவிப்பு!! (வீடியோ)

உலகமெங்கும் பல்லாயிரக் கணக்கான மக்களைக் கொன்று குவித்து வருகின்றது கொரோனா என்ற வைரஸ். உலக நாடுகள் தற்போது முற்று முழுதாக முடங்கிக் கிடக்கின்றது.

இந் நிலையில், பிரான்ஸ் அரசாங்கத்தினால் வசந்தகால விடுமுறைச் சுற்றுலாவுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இருந்தும் இத் தடையினைப் பொருட்படுத்தாது பரிஸ் வாழ் மக்கள் வசந்தகால விடுமுறைக்கு சுற்றுலாவுக்குச் செல்ல ஆரம்பித்துள்ளனர்.

நேற்றைய தினம் மாலை பரிஸ் சுற்றுவட்ட வீதி மற்றும் நெடுஞ்சாலையை அண்மித்த பகுதிகளில் நூற்றுக் கணக்கான மக்கள் கார்களில் குடும்பம் குடும்பமாகச் சுற்றுலாவுக்கு புறப்பட்டதைக் காணக் கூடியதாக இருந்தது.
இந் நிலையில் இவ்வாறு சுற்றலாவுக்குப் புறப்பட்டவர்களை நெடுஞ்சாலைக்குச் செல்வதற்கு முன்னரே ஜொந்தாமினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனால் மிக நீண்ட தூரத்துக்கு கார்கள் வரிசையில் நிற்பதைக் காணக் கூடியதாகவிருந்தது.

அனைவரையும் சோதனையிட்ட ஜொந்தாமினர், கட்டுப்பாட்டை மீறி, அனுமதி பத்திரம் இன்றி புறப்பட்டவர்கள் அனைவருக்கும் தண்டப் பணம் அறவிட்டுள்ளனா்.

குறிப்பாக Normandy நகர் நோக்கிச் செல்லும் A13 நெடுஞ்சாலைக்குள் நுழைவதற்காக மிக நீண்ட தூரத்துக்கு காா்கள் காத்திருந்துள்ளன. எந்தவொரு பயணங்களையும் ஜொந்தாமினர் அனுமதிக்கவில்லை. கிட்டத்தட்ட அனைவருக்கும் 135€கள் தண்டப் பணம் அறவிட்டு அவர்களை வீட்டுக்கு திருப்பி அனுப்பி வைத்துள்ளனா்.

காருக்குள் நால்வர் இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு 450€வரை தண்டப்பணம் அறவிட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது.

இதேவேளை விடுமுறைக் காலத்தில் தேவையற்ற முறையில் சுற்றுலா என்றோ அல்லது தேவையற்ற முறையிலோ வெளியே செல்பவர்களிற்குக் குற்றப்பணம் விதிக்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இப்படி வெளியே செல்லும் வாகனங்களிற்குள் எத்தனை பேர் இருந்தாலும், அவர்கள் ஒவ்வொருவரிற்கும் தனித்தனியாகக் குற்றப்பணம் அறவிடப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

முக்கியமாக நெடுஞ்சாலைகளிலும், நெடுஞ்சாலைச் சுங்கக் கட்டணச் சாவடிகளிலும் சோதனைகளைக் காவல் துறையினரும் ஜோந்தார்மினரும் அதிகப்படுத்தி உள்ளனர்.
Previous Post Next Post