ஐரோப்பிய நாடொன்றிலிருந்து கொரோனாவுடன் இலங்கை வந்தவர் உயிர் தப்பியது எப்படி?

இத்தாலியில் ஒரு கட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக பரவ ஆரம்பித்த போது அங்கு சிக்கி தவித்த இலங்கையர் ஒருவர் தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

“எனது பெயர் மினோல், எனக்கு எனது பாட்டி குறித்து அதிகம் பயம் ஏற்பட்டது. அதனால் இத்தாலியில் இருந்து பாட்டியுடன் இலங்கை வர தீர்மானித்தேன். இலங்கை வந்தவுடன் எனக்கு கொரோனா தொற்றியமை உறுதியாகியது.

எனினும் இலங்கை சுகாதார பிரிவின் அர்ப்பாணிப்பால் எனது உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. நான் அவர்களுக்கு நன்றிக் கடன் பட்டுள்ளேன்.
எனக்கு 23 வயதாகிறது. எனது குடும்பத்தினர் இத்தாலியில் மிலானே நகரத்தில் வாழ்கின்றார்கள். அங்கு வைரஸ் வேகமாக பரவியது. வயோதிபர்களையே அதிகமாக தாக்கியது.

நான் எனது பாட்டி குறித்தே அச்சப்பட்டேன். இத்தாலியில் உள்ளவர்கள் இந்த நோயை சாதாரணமாக எண்ணிவிட்டார்கள். அவர்களின் கவனயீனத்தால் பாட்டியை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு நாங்கள் தீர்மானித்தோம்.

அதற்கமைய மார்ச் மாதம் 12ஆம் திகதி நாங்கள் இலங்கைக்கு வந்தோம். நான் இலங்கை வரும் போது எனக்கு கொரோனா தொற்றியிருந்ததனை நான் அறிந்திருக்கவில்லை. எனக்கு நோய் அறிகுறிகளும் காணப்படவில்லை.


இத்தாலியில் நான் சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. டுபாயில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. எனினும் அங்கு தொற்றில்லை என கூறப்பட்டது.

இலங்கை வரும் போது எனக்கு எவ்வித பாதிப்பும் காணப்படவில்லை. கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த என்னையும் எனது பாட்டியையும் பூனானி தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தார்கள். அங்கு சொந்த வீட்டில் போன்று பார்த்துக் கொண்டார்கள். கொத்தமல்லி போன்ற உள்ளூர் உற்பத்திகளை வழங்கினார்கள்.

வயோதிபர்கள் மற்றும் சிறுவர்களுக்கு தாங்கள் விரும்பிய உணவை இராணுவத்தினர் வழங்கினார்கள். இரண்டு நாட்களின் பின்னர் என்னை பொலநறுவை வைத்தியசாலைக்கு அனுப்பினார்கள். அங்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

அதன் பின்னர் கொழும்பு IDH வைத்தியசாலைக்கு மாற்றினார்கள். அங்கு 43 நாட்கள் சிகிச்சை பெற்றேன்.

எங்கள் மனநிலையை சீராக வைத்திருந்தார்கள். இடைக்கிடையே எங்கள் இரத்த மாதிரியை சோதனையிட்டார்கள். கொத்தமல்லி போன்ற பாணங்களை வழங்கினார்கள். அவர்களின் சேவைகளை வார்த்தைகளால் கூறிவிட முடியாது.

அதிக வெயிலில் வியர்வையுடன் அந்த ஆடைகளை அணிந்து சேவை செய்தார்கள். எங்களுக்காக பாரிய அர்ப்பணிப்பில் ஈடுபட்டார்கள். உண்மையான வீரர்கள் என்பதன் அர்த்தம் எங்கள் வைத்திய அதிகாரிகளை பார்த்த பின்னரே புரிந்தது.

எங்கள் நாடு சிறிய நாடுகளில் ஒன்றாகும். ஐரோப்பா போன்று வசதிகள் இல்லை. எனினும் எந்தவொரு நாட்டிலும் இல்லாத அளவு மனநிலை சுகாதாரத்தை பார்த்துக் கொண்டார்கள்.

நோயாளிகளை கட்டுப்படுத்தியது மாத்திரமின்றி முழுமையான சிகிச்சை வழங்கிய பின்னரே எங்களை சமூகத்திற்கு செல்ல அனுமதித்தார்கள்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post