பிரான்ஸில் தீவிரமடையும் கொரோனா! மீண்டும் நாடு முடக்கப்படும் என எச்சரிக்கை? (வீடியோ)

பிரான்ஸில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் அங்கு கொரோனா வைரஸ் புதிய தொற்று நோயாளா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று மூன்றாவது நாளாக தினசரி தொற்று நோயாளர் எண்ணிக்கை 1300-க்கும் அதிகமாகப் பதிவாகியுள்ளது.

நேற்று வெள்ளிக்கிழமை 1,346 புதிய கொரோனா வைரஸ் தொற்று நோயாளா்கள் பதிவானதாக பிரெஞ்சு சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புதிய நோயாளா்களுடன் நாட்டில் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 187,919 ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்துக்குப் பின்னர் பதிவான அதிகபட்ச தொற்று நோயாளா்கள் தொகை இதுவாகும்.

இந்நிலையில் தொற்று நோய் தொடா்ந்தும் அதிகரிக்கும் பட்சத்தில் சமூக முடக்கல் உள்ளிட்ட கடும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் அமுலாகலாம் என சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இதேவேளை, தொற்றுக்குள்ளாகி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளவா்களின் எண்ணிக்கை 371-ஆகக் குறைந்துள்ளது என பிரெஞ்சு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

வியாழக்கிழமை தீவிர சிகிச்சைப் பிரிவு நோயாளா் எண்ணிக்கை ஒன்றால் மட்டுமே அதிகரித்தது. அத்துடன் கடந்த 24 மணி நேரங்களில் பிரான்ஸில் கொரோனாவால் 11 பேர் இறந்தனர்.

இவற்றுடன் நாட்டில் உயிரிழந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 30,265 ஆக உயா்ந்துள்ளது. வியாழக்கிழமை வரையான மூன்று நாட்களில் முறையே 16, 15 மற்றும் 14 ஆக இறப்புக்கள் பதிவாகியுள்ளன.
Previous Post Next Post