யாழில் வாள்வெட்டுக் குழுவால் புதைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் மீட்பு! (படங்கள்)


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
யாழ். செம்மணி இந்துமயான வளாகத்துக்குள் வன்முறை கும்பலினால் புதைக்கப்பட்டிருந்த கைக்குண்டு மற்றும் மிதிவெடிகள் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் செயற்படும் வன்முறைக்குழு ஒன்றினால் குறித்த பகுதியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்களே இன்றைய தினம் நீதிமன்ற உத்தரவின் பேரில் இன்றைய தினம் மீட்கப்ப்பட்டுள்ளது.

இது குறித்து மேலும் தெரிய வருகையில்,

யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் வைத்து நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை காலையில் விக்டர் சுந்தர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது.

தாக்குதலில் படுகாயமடைந்த அவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

நாயன்மார்கட்டுப் பகுதியைச் சேர்ந்த விக்டர் சுந்தர், பல்வேறு வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்று பொலிஸாரால் தெரிவிக்கப்பட்ட நிலையில்,

சம்பவம் தொடர்பில் ஆவா என பொலிஸாரால் விழிக்கப்படும் வன்முறைக் கும்பலைச் சேர்ந்த நிசா விக்டர் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரால் நேற்றுமுன்தினம் இராணுவத்தினரின் உதவியுடன் ஊர்காவற்துறையில் கைது செய்யப்பட்டார்.

குறித்த சந்தேக நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் அவர் நேற்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.

இந்த வழக்கு யாழ்ப்பாணம் நீதிமன்ற மேலதிக நீதிவான் நளினி சுதாகரன் முன்னிலையில் அழைக்கப்பட்டது.

"சந்தேக நபர், நபர் ஒருவரை வெட்டி படுகாயம் ஏற்படுத்தியதன் மூலம் அவரைக் கொலை செய்ய முயற்சித்துள்ளார். அத்தோடு அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் செம்மணி பகுதியில் கைக்குண்டு மற்றும் ஜொனி ரக மிதிவெடி ஆகியனவும் மறைத்து வைத்திருந்தமை காண்பிக்கப்பட்டுள்ளது.

அவை நீதிமன்றின் உத்தரவில் மீட்கப்படவேண்டும்" என்று பொலிஸார் மன்றுரைத்தனர். சந்தேக நபர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள், பிணை விண்ணப்பத்தை முன்வைத்தனர்.

இருதரப்பு விண்ணப்பத்தையும் ஆராய்ந்த மன்று, சந்தேக நபரை வரும் 22ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளதுடன் குறித்த வெடிபொருட்களை மீட்க அனுமதி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post