1913 ஆம் ஆண்டுக்குப் பின் அதிகளவான புலம்பெயர்ந்தோரை குடியேற்றுகிறது கனடா அரசு!


தொற்று நோய் நெருக்கடிக்கு மத்தியிலும் 2021 முதல் 2023 வரையான 3 ஆண்டுகளில் 12 இலட்சம் புதிய குடியேற்றவாசிகளை வரவேற்கும் திட்டத்தில் கனடா உறுதியாக உள்ளது.

இவ்வாண்டு 4 இலட்சத்துக்கு மேற்பட்ட குடியேற்றவாசிகளை வரவேற்கும் செயற்றிட்டத்தின் ஒரு அங்கமாக கடந்த ஜூன் வரையான ஆறு மாதங்களில் சுமார் 143,000 புதிய நிரந்தர குடியிருப்பாளர்களை கனடா வரவேற்றுள்ளது.

கொவிட் 19 தொற்று நோய் நெருக்கடிக்கு மத்தியிலும் இவ்வாண்டு கடந்த ஜூன் மாதத்தில் 35,000 -க்கும் மேற்பட்ட புதிய குடியேற்றவாசிகள் கனடாவில் குடியேறியுள்ளனர்

2021 ஆம் ஆண்டில் 401,000 புதிய குடியேற்றவாசிகளை வரவேற்கும் இலக்கை கனடா முழுமையாக அடையவேண்டுமானால் இவ்வாண்டு ஜூலை முதல் டிசம்பர் வரை சராசரியாக மாதாந்தம் 43,000 புதிய குடியேற்றவாசிகளை கனடா வரவேற்கவேண்டியுள்ளது.

புதிய குடியேற்றவாசிகளை வரவேற்கும் திட்டத்தின் வலுவான மாதமாக 2021 ஜூன் அமைந்ததாக குடிவரவு அமைச்சர் மார்கோ மெண்டிசினோ அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்தச் சிறப்பான தொடக்கத்துடன் 2021 -ஆம் ஆண்டும் 401,000 புதிய நிரந்தர குடியிருப்பாளர்களை நாட்டுக்குள் வரவேற்பதற்கான எங்கள் உறுதிப்பாட்டை நாங்கள் சிறப்பாக முன்னெடுக்கவுள்ளோம் எனவும் அமைச்சரின் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

2021 முதல் 2023 ஆம் ஆண்டுவரையான 3 ஆண்டுகளில் வருடந்தோரும் தலா 4 இலட்சம் வீதம் 12 இலட்சம் புதிய குடியேற்றவாசிகளை வரவேற்க கனடா இலக்கு நிர்ணயித்தது. எனினும் தொற்று நோய் நெருக்கடி மற்றும் பயணக் கட்டுப்பாடுகளால் இந்த ஆண்டு மே வரை குடியேற்றவாசிகளை திட்டமிட்டவாறு நாட்டுக்குள் அழைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து ஜூன் மாதம் 35,000 புதிய குடியேற்றவாசிகள் கனடாவில் தரையிறங்கியுள்ளனர்.

கனேடிய அரசின் வருடாந்தம் 4 இலட்சத்துக்கு மேற்பட்டவர்களை வரவேற்றும் இலக்கு நிறைவேறினால் 1913 இன் பின்னர் ஒரே ஆண்டில் அதிக குடியேற்றவாசிகளை வரவேற்ற சாதனையாக இது அமையும். இதுவரை 1913 ஆம் ஆண்டு மட்டுமே 4 இலட்சத்துக்கு மேற்பட்ட குடியேற்றவாசிகளை கனடா வரவேற்றுள்ளது.

புலம்பெயர்ந்தோரை வரவேற்கும் திட்டத்தை இந்த ஆண்டு ஜனவரியில் கனடா வலுவாக ஆரம்பித்தது. இவ்வாண்டு ஜனவரி மாதத்தில் 24,680 புதிய புலம்பெயர்ந்தோர் வரவேற்கப்பட்டனர். பெப்ரவரியில் 23,395, மார்ச் மாதத்தில் 22,425, ஏப்ரல் மாதத்தில் 21,155, மே மாதம் 17,100 குடியேற்றவாசிகள் நாட்டுக்கு வந்த நிலையில் மீண்டும் வலுவான தொடக்கமாக மே மாதம் 35 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் வரவேற்கப்பட்டனர்.

ஒட்டுமொத்தமாக 2021 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் சுமார் 143,000 புதிய நிரந்தர குடியிருப்பாளர்களை கனடா வரவேற்றுள்ளது. எனினும் இந்த ஆண்டு இறுதிக்குள் 401,000 புதியவர்களை வரவேற்கும் திட்டத்தை அடைய இந்த இலக்கு போதுமானதாக இல்லை.

இந்த இலக்கை திட்டமிட்டவாறு அடைய வேண்டுமானால் கனடா மேலும் 258,000 புலம்பெயர்ந்தோரை வரவேற்க வேண்டியுள்ளது. அவ்வாறாயின் சராசரியாக மாதத்திற்கு 43,000 புலம்பெயர்ந்தோர் நாட்டுக்குள் வரவேற்கப்பட வேண்டும். மீதமுள்ள ஆறு மாதங்களில் இந்த இலக்கை அடைவது கடினம் எனக் கருதப்படுகின்றபோதும், இதற்கான முயற்சிகள் தொடரும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
Previous Post Next Post