பருத்தித்துறையில் அடையாளம் காணப்பட்ட 7 வர்த்தகர்களில் அறுவர் தலைமறைவு!


பருத்தித்துறை நகர் வர்த்தக தொகுதியில் மேலும் 7 வர்த்தகர்களுக்கு தொற்று உள்ளமை இன்றைய பரிசோதனைகளில் கண்டறியப்பட்ட நிலையில் அவர்களில் 6 பேர் தலைமறைவாகியுள்ளனர்.

அவர்கள் அனைவரும் புத்தளம் மற்றும் காத்தான்குடியைச் சேர்ந்தவர்கள் என்பதால் பொலிஸார் ஊடாக அவர்களைக் கைது செய்ய சுகாதாரத் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பருத்தித்துறை நகர் வர்த்தக தொகுதியில் 23 பேரிடம் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் 7 வர்த்தகர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று வெள்ளிக்கிழமை கண்டறிப்பட்டுள்ளது.

பருத்தித்துறை நகர் நேற்றிரவு முதல் முடக்கப்பட்டு வங்கிகள் மட்டும் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபட அனுமதிக்கப்பட்டது.

இந்த நிலையில் பருத்தித்துறை நகர் வர்த்தக தொகுதியில் 23 பேரிடம் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் 7 வர்த்தகர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.

அதனையடுத்து தொற்றாளர்களை அடையாளம் கண்டு கோவிட்-19 இடைத்தங்கல் முகாமுக்கு அனுப்பும் பணியில் சுகாதாரத் துறையினர் ஈடுபட்ட போது 6 வர்த்தகர்கள் தலைமறைவாகியுள்ளனர்.

அவர்கள் 6 பேரும் பிசிஆர் மாதிரிகளை வழங்கிய நிலையில் தமது சொந்த ஊரான புத்தளம் மற்றும் காத்தான்குடிக்கு சென்றுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அவர்களிடன் பணியாற்றியவர்களை சுயதனிமைப்படுத்த சென்ற போது அவர்களும் தலைமறைவாகியுள்ளதால் பொலிஸாரின் உதவியை சுகாதாரத் துறையினர் நாடியுள்ளனர்.

இதேவேளை, தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றத்துக்கு குறைந்தது ஒரு ஆண்டு சிறைத் தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் தண்டப்பணமும் விதிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post