இன்னும் சில நாள்கள்தான்...!மக்களின் பொறுப்பின்மையால் ஏற்படப் போகும் ஆபத்து!


விரக்தியடைந்த மற்றும் சோர்வடைந்த சுகாதாரப் பணியாளர்களின் சார்பாக கோவிட்-19 நோய்த்தொற்றினால் நாட்டு மக்களின் பொறுப்பின்மை தொடர்பில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் கோவிட்-19 சிகிச்சைப் பிரிவு பொது மருத்துவ வல்லுநர் தனது கருத்தை முகநூல் பக்கத்தில்  பதிவிட்டுள்ளார்.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கொரோனா இல்லா இலங்கையில் வாழ்ந்து கொண்டாடித்திரியும் இலங்கையர்களாகிய உங்களுக்கு, அதே இலங்கையின் வைத்தியசாலைகளில் கோரோனா நோயாளிகளின் மத்தியில் விழி பிதுங்கி மூச்சுத்திணறும் சுகாதார பிரிவினரின் சார்பாக சின்ன தகவலொன்றைத் தர விரும்புகிறேன்.

மருத்துவராக சேவை செய்யத் தொடங்கிய இந்தப் பதினாறு வருடங்களில் நோயாளிகளுக்கு தீவிர சிகிச்சை படுக்கை (ICU bed) கேட்டு ஒவ்வொரு வைத்தியசாலையாக தொலைபேசி அழைப்பு எடுத்து பலமுறை கெஞ்சியதுண்டு.

ஆனால் ஒருபோதும் நோயாளிக்குரிய சாதாரண கட்டிலில் இடமொன்றை கேட்டு கெஞ்சியதில்லை, அதையும் செய்ய வைத்துள்ளது இந்தக் கொரோனா.
வைத்தியசாலைகள் நோயாளிகளினால் நிரம்பி வழிகின்றன. இனி வரும் நோயாளிகளை எங்கு அனுமதிப்பது என்று தெரியாமல் நாங்கள் தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறோம். நேற்றுக் காலையிலிருந்து ஒரு நோயாளிக்கு ஒக்சிசன் சிகிச்சை வசதி கட்டில் (oxygen bed) தேடி ஒவ்வொரு வைத்தியசாலையாக தொலைபேசி அழைப்பெடுத்து கேட்டுக் கொண்டிருக்கிறோம்.

வைத்தியசாலையின் அனைத்துப்பிரிவு ஊழியர்களும் மனதாலும் உடலாலும் களைத்துவிட்டார்கள். வைத்தியசாலை ஊழியர்களிடையே கொரோனா ஒரு காட்டுத்தீயைப் போல பரவிக்கொண்டிருக்கிறது. வேலைப் படையின் அளவு குறைந்துகொண்டே போகிறது.

கொரோனா கொரோனா என்றே வைத்தியசாலைகள் எங்கும் எதிரொலிக்கிறது. வீட்டுக்கு வந்தாலும், வரும் அழைப்புகளில் 90 வீதத்துக்கும் மேலானவை கொரோனா அழைப்புகளாகவே இருக்கிறது.

ஆனால் இலங்கைக் குடிமக்களாகிய நீங்கள் என்ன செயகறீர்கள்?பொறுப்புடன் நடக்கிறீர்களா? இல்லவே இல்லை. பற்றியெரியும் போது பிடில் வாசிக்கும் நீரோக்களைப் போல, நீங்கள் அலட்சியமாக பொறுப்பற்று நடக்கிறீர்கள்.

உணவங்களில் கூட்டம் நெரிக்கிறது. பிறந்தநாள் விழாக்கள், திருமண வைபவங்கள் என்பவற்றில் கூட்டம் அலைமோதுகின்றது.

தெருவோரக்கடைகளில் நின்று தின்பதற்கென்றே துவிச்சக்கர வண்டி முதல் ஆடம்பரக் கார் வரை வாகனங்களில் கூட்டம் வருகின்றது. முகக்கவசமின்றி வீதியோரங்களில் நின்று கூச்சலிடுகின்றனர் இளைய சமுதாயம்.

இன்னும் சில நாள்கள்தான். வைத்தியசாலைகளுக்கு வெளியே, நோயாளர் கட்டிலுக்காக ஏங்கியபடி வாகனங்களிலும் மரத்தடிகளிலும் வீதிகளிலும் நீங்களும் உங்களின் அன்புக்குரியவர்களும் காத்திருக்கப் போகிறீர்கள்.

ஒவ்வொரு வைத்தியசாலையாக இடந்தேடி அலைந்து கதறப்போகிறீர்கள். 30 வருடப் போரைவிடவும் சுனாமியை விடவும் கொடூரமாக கோரோனா உங்களை காவு கொள்ளப்போகிறது. தயாராக இருங்கள். வினை விதைத்தவன் வினை தான் அறுக்கவேண்டும். வாழத்துக்கள்.

விரக்தியடைந்த மற்றும் சோர்வடைந்த சுகாதாரப் பணியாளர்களின்  சார்பாக…
Previous Post Next Post