பிரான்ஸில் நாளை முதல் 6 லட்சம் பேரது சுகாதார பாஸ்கள் செயலிழக்கும் அபாயம்!


  • குமாரதாஸன். பாரிஸ்.
பிரான்ஸில் மூன்றாவது தடுப்பூசியை - பூஸ்ரர் டோஸை-ஏற்றிக் கொள்ளத் தவறியவர்களின் சுகாதாரப் பாஸ்கள் நாளை 15 ஆம் திகதி சனிக்கிழமை முதல் செயலிழக்கத் தொடங்கும் (désactivé) என்று அறிவிக்கப்படுகிறது.சுகாதார அமைச்சின் தகவலின்படி சுமார் ஆறு லட்சம் பேரது சுகாதாரப் பாஸ்கள் செயலிழக்கும் என்பது தெரியவந்துள்ளது.
 
பிரான்ஸில் வளர்ந்தவர்கள் அனைவருக்கும் மூன்றாவது பூஸ்ரர் டோஸ் ஏற்றும் திட்டத்தை அரசு கடந்த நவம்பர் மாதம் அறிவித்தது. 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் உடலில் நோய் எதிர்ப்புக் குறைபாடு உடையவர்களுக்கும் முன்னுரிமைப்படி பூஸ்ரர் செலுத்துவது ஆரம்பிக்கப்பட்டது.

கடைசி ஊசி ஏற்றி ஏழு மாத காலத்துக்குள் பூஸ்ரர் ஊசியைப் பெறத் தவறுவோரது சுகாதாரப் பாஸ்கள் ஜனவரி 15 ஆம் திகதி தொடக்கம் படிப்படியாகச் செயலிழக்கும் என்பதையும் அரசு அறிவித்திருந்தது. அந்தக் காலக் கெடு நாளை ஆகும்.

பூஸ்ரர் டோஸ் ஏற்றுமாறு ஞாபகப்படுத்துகின்ற செய்திகள் சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.இரண்டாவது ஊசி ஏற்றிய பிறகு ஒருவர் வைரஸ் தொற்றுக்கு இலக்காகியிருந்தால் அத்தகையோர் தொற்றிலிருந்து மீண்டதை உறுதிப்படுத்தும் சான்றிதழை சமர்ப்பிப்பதன் மூலம் சுகாதாரப் பாஸ் செயலிழப்பதைத் தாமதப்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசிப் பாஸுக்கு செனற் அங்கீகாரம் கடும் வாதப்பிரதிவாதங்களுக்குப் பின் னர் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தடுப்பூசிப் பாஸ் பிரேரணையை நாடாளுமன்ற மேற்சபையாகிய செனற் சபையும் சில திருத்தங்களுடன் அங்கீகரித்துள்ளது.

ஆனால் முக்கிய திருத்தங்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினரன்களுக்கும் செனற்றுக்கும் இடையே இன்னமும் இணக்கம் எட்டப்படவில்லை.
 
நாட்டில் தற்சமயம் பயன்பாட்டில் உள்ள சுகாதாரப் பாஸை (passe sanitaire) தடுப்பூசிப் பாஸாக (passe vaccinal) மாற்றுவதற்கு அரசு தீர்மானித்திருப்பது தெரிந்ததே. 

மருத்துவம் சார்ந்த இடங்கள் தவிர்ந் ஏனைய இடங்களுக்குச் செல்வதற்கான அனுமதியை வழங்குகின்ற முக்கிய ஆவணமாகத் தடுப்பூசிப் பாஸ் மாறவுள்ளது. அது நடைமுறைக்கு வந்த பின்னர், ஒருவர் தொற்றற்றவர் என்பதை நிரூபிப்பதற்கு வைரஸ் பரிசோதனை செய்த சான்றிதழ்கள் எதனையும் பயன்படுத்த முடியாது போகும்.
Previous Post Next Post