ஜேர்மனியை உலுக்கும் எரிவாயு நெருக்கடி! பாவனையைக் குறைக்குமாறு கோரிக்கை!!

  • பாரிஸிலிருந்து குமாரதாஸன்
உக்ரைன் போரை அடுத்து ஐரோப்பியஒன்றியத்துக்கும் ரஷ்யாவுக்கும் இடையே மூண்டிருக்கின்ற எரிசக்தி மோதல் ஜேர்மனியை உலுக்கத் தொடங்கியுள்ளது. தொழிற்சாலைகளுக்கும் மற்றும் பாவனையாளர்களுக்கும் பங்கீட்டு அடிப்படையில் (gas rationing) எரிவாயுவை வழங்கவேண்டிய கட்டத்தை நோக்கி அது நகரத் தொடங்கியுள்ளது.

ஐரோப்பாவின் மிகப் பெரிய பொருளாதார சக்தியாகிய ஜேர்மனி
ரஷ்யாவின் எரிவாயுத் தடையின் காரணமாகப் பெரும் நெருக்கடியைச் சந்தித்துள்ளது.ரஷ்யா அதன் Nord Stream 1 குழாய் மூலமான இயற்கை எரிவாயு விநியோகத்தைக் கடந்த வாரம் 40 வீதம் துண்டித்தது. அதனை அடுத்தே ஜேர்மனி உட்படப் பல ஐரோப்பிய நாடுகளில் எரிசக்தி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

ரஷ்யாவின் இயற்கை எரிவாயுத் துண்டிப்பை எதிர்கொள்வதற்கான
நெருக்கடி நிலைத் திட்டங்களை ஜேர்மனி நாட்டு அரசு மூன்று கட்டங்களாக (three-stage emergency plan for natural gas)நடைமுறைப்படுத்தவுள்ளது. அதில் இரண்டாவது கட்டமாகிய"நீண்ட கால எரிவாயு விநியோகப் பற்றாக்குறைப் பேராபத்து" (high risk of long-term gas supply shortages) என்ற சுட்டி நிலை நாடெங்கும்
முடுக்கிவிடப்படுவதாகப் பொருளாதார அமைச்சர் ரொபேர்ட் ஹெபெக் (Robert Habeck) அறிவித்திருக்கிறார்.

"எரிவாயு இப்போது ஒரு பற்றாக்குறைப் பொருளாகிவிட்டதாகக் கூறிய ஹேபெக், அதன் அசாதாரண விலை ஏற்றம் தொடர்ந்து நீடிக்கக்கூடும் என்று எச்சரித்தார். "இது தொழில்துறை உற்பத்தியைப் பாதிக்கும். நுகர்வோருக்குப் பெரும் சுமையாக மாறும்"என்றும் கூறினார்.

இயற்கை எரிவாயுப் பாவனையைக் குறைப்பதன் மூலம் குளிர்காலத்துக்குத்
தேவையான கையிருப்பைப் பேணவும் பதிலாக நிலக்கரியை எரித்துப் பெறப்படுகின்ற எரிசக்தித் திட்டங்களை ஆரம்பிக்கவும் ஜேர்மனி
திட்டமிட்டுவருகிறது. சூழலைப் பாதிக்கின்ற பெருமளவு கார்பன்
வெளியேற்றத்துக்குக் காரணமான நிலக்கரி எரிசக்தித் திட்டங்களை மீள
ஆரம்பிக்கவேண்டிய அவசியத்தை உக்ரைன் போர் ஏற்படுத்தியுள்ளது.
Previous Post Next Post