மொழியறிவு இல்லாத ஈழத் தமிழரை ஏமாற்றிய நண்பன்! சுவிஸில் நடந்த பாரிய மோசடியின் பிண்ணனி வெளியாகியது!!

புலம்பெயர் தேசங்களில் பிழையான ஒருவனை நண்பனாக வைத்திருப்பதும் அந்த நண்பன் மீது அனைத்து விடயங்களிலும் நம்பிக்கை வைப்பதும் எப்படியான பின்விளைவுக்கு இட்டுச்செல்லும் என்பதற்கு சுவிட்சர்லாந்தில் சுக் மாகாணத்தில் வசித்துவரும் ஒரு ஈழத்தமிருக்கு ஏற்பட்ட சம்பவம் நல்லதொரு உதாரணம்.

சுவிஸ் நாட்டில் சுக் மாநிலத்தில் Zug- Unterägeri கிராமத்தினைச் சேர்ந்த ஒரு ஈழத்தமிழர் லொத்தர் கீறுவதில் ஆர்வமுடையவர் . கடந்த வாரம் அப்பகுதியில் உள்ள ஒரு கடையில் லொத்தர் வாங்கி இலக்கங்களை கீறியுள்ளார் .

மொழியறிவு பெரிதாக இல்லாத அந்த மனிதர் மறுநாள் அந்த கடையிலேயே தான் வரைந்த லொத்தர் சிட்டையை பரிசீலித்துக்கொள்வது வழக்கம். அந்த கடைக்காரரும் லொத்தரில் வென்றிருந்தால் அதற்கேற்ப பணத்தை வழங்குவார்.

ஆனால் கடந்த முறை அவரால் கீறி வழங்கப்பட்ட சிட்டையை பரிசீலித்த கியோக்ஸ் கடைக்காரர், “நீங்கள் பெருந்தொகைப் பணத்தை வென்றிருக்கிறீர்கள். இதனை நாம் வழங்க முடியாது. லொத்தர் நிறுவனத்தில்தான் பெற்றுக்கொள்ளமுடியும்” எனக்கூறி ஒரு படிவத்தினையும் மேலதிகமாக வழங்கி ‘இதனைப் பூர்த்தி செய்து லொத்தர் சபையின் முகவரிக்கு அனுப்புமாறு’ அறிவுறுத்தியிருந்தனர் .

குறித்த ஈழத்தமிழரும் வீடு வந்து சேர்ந்தார் . இவரும் இவருடைய நண்பரும் மாலைப்பொழுதில் சந்திப்பதுண்டு. அந்த சமயத்தில் அவர் தனது நண்பருக்கு லொத்தரின் போது கியோக்ஸ்கில் இடம்பெற்ற சம்பவத்தினை விபரித்துள்ளார் .

அப்போது தனக்கு எவ்வளவு பணம் லொத்தராக கிடைத்திருக்கும் என்பது பற்றி தெரியாது எனவும் குறித்த நண்பரிடம் கூறியுள்ளார் . நண்பரும் ‘விபரங்கள் எல்லாவற்றையும் என்னிடம் தா! நான் இவற்றை எனது மகன் மூலமாக செய்து தருகிறேன்’ என்றிருக்கிறார் .

மொழியறிவு இன்மை காரணமாக குறித்த லொத்தர் உரித்தாளரான அவர் தனது நண்பரிடம் யாவற்றையும் வழங்கியுள்ளார் . மறுநாள் தொடர்பு கொண்ட குறித்த நண்பர் "உமக்கு 2500 சுவிஸ் பிராங் லொத்தர் தொகையாக விழுந்துள்ளது’ என்று கூறி அவற்றை தான் பெற்றுத் தருவதாகவும் கூறியுள்ளார்.

அதனை இவரும் ஏற்றுக்கொண்டுள்ளார் . பின்பு அவசரமாக தொடர்பு கொண்ட நண்பர் – ‘லொத்தர் சிட்டை மற்றைய விபரங்கள் ஏதாவது போட்டோ பிரதி எடுத்து வைத்திருக்கிறீர்களா' என வினாவி உள்ளார். ‘அவ்வாறு எடுத்திருந்தால் அவற்றை உடனே அழிக்கும் படியும் கூறியுள்ளார்.

குறித்த லொத்தர் உரிமையாளர் வழமையாக லொத்தர் கொள்வனவு செய்தால் அதனையும் தான் புள்ளடியிட்ட இலக்கங்களையும் தனது தொலைபேசியில் போட்டோ எடுத்து வைத்திருப்பது வழக்கம். அதனடிப்படையில் இந்த லொத்தர் சிட்டையையும் புள்ளடி இட்ட இலக்கங்களையும் கைத்தொலைபேசியில் போட்டோ எடுத்து வைத்திருந்தார்

நண்பரோ அடிக்கடி தொடர்பு கொண்டு போட்டோ எடுத்து வைத்துள்ளவற்றை அழிக்கும் படி வலியுறுத்திக் கொண்டிருந்தார். கடைசியாக 2500 சுவிஸ் பிராங்க் பணத்தை அவர்டம் வழங்கி ‘இதுவே லொத்தர் மூலம் கிடைத்த பணம்' என கூறி லொத்தர் உரிமையாளிடம் கையளித்தும் விட்டார் .

அதன் பின்னரும் கூட அவருடைய லொத்தர் சம்பந்தமான போட்டோ ஆவணங்களை அழிக்கும் படி வலியுறுத்திக் கொண்டிருந்தார் . இதனால் சந்தேகம் அடைந்த அவர் கைத்தொலைபேசியில் உள்ள ஆவணங்களை தனது வேறு ஒரு நண்பரிடம் காட்டி வினாவியுள்ளார் .

அவர் இந்த லொத்தர் இலக்கத்தினை பரிசிலித்து அவர் 45000 சுவிஸ் பிராங்குகளை வென்றிருப்பதாக ஆதாரபூர்வமாக காட்டி நிரூபித்தார் . இதனைக் கண்ட லொத்தர் உரிமையாளர் தான் ஏமாற்றப்பட்டதனை அப்போது தான் உணர்ந்தார் .

இந்தவிடயம் தொடர்பாக லொத்தர் பணத்தைப் பெற்றுத்தந்த நண்பரோடு பேசிய போது அவர் மறுத்துவிட்டார் . இதனால் ஏமாற்றப்பட்ட ஈழத்தமிழர் சுக் மாநிலத்திலுள்ள சில சமூக ஆர்வலர்களின் உதவியோடு காவல்துறையிடம் புகார் அளித்தார்.

காவற்துறையின் விசாரணையின் போது 45000 சுவிஸ் பிராங்கை லொத்தர் சபையிடம் இருந்து பெற்றதனை குறித்த நண்பர் ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் இந்த லொத்தர் இலக்கங்களை தானும் தனது நண்பரும் இணைந்தே புள்ளடி இட்டதாகவும் அந்தப்பணம் தனக்கே சொந்தமானது என பொய்யுரைத்துள்ளார் .

ஆனாலும் சுவிஸ் காவல்துறை இதனை நுணுக்கமாக ஆராய்ந்து குறித்த நண்பரின் பொய்யான கட்டுக்கதையை கண்டுபிடித்துள்ளார்கள். காவல்துறை விசாரணைகள் தற்பொழுதும் தொடர்கிறது . தண்டனைகள் எவ்வாறு அமையப்போகின்றன என்பதனை பொறுத்திருந்தே பார்க்கவேண்டும்.

நண்பனுக்கு அழிவு வரும்போது அதை விலக்கி அவனை நிலைபெறச் செய்து. தன்னையும் மீறிய அழிவின் போது தானும் அவனோடு துயரப்படுவதே நல்ல நட்பாகும் என்கிறார் திருவள்ளுவர்.

ஆனால் இந்த நட்பு நட்பையே இழிநிலைப்படுத்துவதாக அமைந்துவிடுகிறது என்கின்ற நிலையில் தமிழனை தமிழனே மோசடி செய்தான் என்பது வருத்திற்கு உள்ளான செயலாகிறது .

இந்த சம்பவம் பற்றிய செய்தி ஒரு எச்சரிக்கையும் மிகப் பெரிய பாடத்தினையும் புலம்பெயர் மண்ணில் உள்ளவர்களுக்கு கற்றுத்தருகிறது .
Previous Post Next Post