
சற்றுமுன் இடம்பெற்ற இவ் விபத்துச் சம்பவத்தில், துவிச்சக்கர வண்டியில் வந்த முதியவர் தலையில் படுகாயமடைந்து, மயக்கமடைந்த நிலையில் முச்சக்கரவண்டி ஒன்றில் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் பரமேஸ்வராச் சந்திப் பகுதியில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலைகளான யாழ் வைத்தியசாலை மற்றும் நொதோண் வைத்தியசாலைகளுக்கு அருகில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
உடனடியாக அங்கு நின்ற மக்கள் விபத்தில் சிக்கிய முதியவருக்கு சிகிச்சை அளிக்குமாறு மேற்குறித்த இரண்டு வைத்தியசாலைகளிலும் உதவி கோரியிருந்தனர்.
இருந்தும் தங்களால் இவருக்கு சிகிச்சை அளிக்க முடியாது என்று இரண்டு வைத்தியசாலை நிர்வாகத்தினரும் தெரிவித்ததுள்ளனர்.
அத்துடன் முதியவரை யாழ்.போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்வதற்காக நொதோண் வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டியைக் கோரியபோதும் அதற்கும் அவ் வைத்தியசாலை மறுப்புத் தெரிவித்துள்ளது.
இதனால் அப் பகுதியில் நின்ற முச்சக்கர வண்டி மூலம் முதியவர் யாழ்.போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
மிகவும் ஆபத்தான நிலையில் இருந்த குறித்த முதியவருக்காக அப் பகுதியில் நின்ற இளைஞன் ஒருவர் இவ்விரு வைத்தியசாலையிலும் உதவி கோரியதாகவும் அவர்கள் அவருக்குச் சிகிச்சை அளிக்க மறுத்ததாகவும் கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் விபத்தில் சிக்கிய முதியவர் உயிரிழந்தால் இவ்விரு வைத்தியசாலைகளுமே முழுப் பொறுப்பு என குறித்த இளைஞன் தெரிவித்துள்ளார்.