இயக்கச்சி காட்டுப் பகுதியில் அநாதரவாக நிற்கும் கார்! இராணுவம், பொலிஸ் குவிப்பு!! (படங்கள்)

கிளிநொச்சி மாவட்டம் இயக்கச்சிக்கு அண்மித்த பகுதியில் பற்றை ஒன்றுக்குள் கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகின்ற கார் தொடர்பில் படைத்தரப்பு மற்றும் பொலிஸாரால் தீவிர விசாரணை முன்னெடுக்கப்பட்டுவருவதாக தெரியவருகிறது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

ஏ - 09 நெடுஞ்சாலையில் இயக்கச்சிக்கும் ஆனையிறவுக்கும் இடைப்பட்ட பகுதியில் இயக்கச்சிக்கு அண்மித்த பகுதியில் உள்ள பற்றைக்காடு ஒன்றினுள் கார் ஒன்று அனாதரவாக நிற்பது தொடர்பில் படைத்தரப்புக்கு தகவல் கிடைத்திருக்கின்றது.

குறித்த காரில் யாரும் இல்லாத நிலையில், அது அங்கே எப்போது கொண்டுவரப்பட்டது?, அது யாருக்குச் சொந்தமானது?, அசம்பாவிதங்கள் எதாவது மேற்கொள்ளப்படப்போகிறதா? போன்ற பல கோண விசாரணைகள் படைத்தரப்பு மற்றும் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றது.

குறித்த காரினை ஒளிப்படம் எடுக்கவோ, அந்தப் பகுதிக்குச் சென்று பார்வையிடவோ ஊடகவியலாளர்களுக்கும் நேற்று அனுமதி வழங்கப்படவில்லை.

விசாரணைகளின் முடிவிலேயே குறித்த விடயம் தொடர்பில் தகவல் தரப்படும் என்று பொலிஸ் தரப்பு தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இன்று 14.04.2021காலை விசேட அதிரடிப்படையின் உதவியுடன் காரின் கதவுகள் திறக்கப்பட்டு பரிசோதனையிடப்பட்டது. காரின் பல பாகங்கள் திருட்டு போயுள்ளதாகவும் தெரிவித்திருந்தனர்.

மேலும் குறித்த கார், தென்னிலங்கையில் திருட்டு போன காராக இருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.இது வரையில் எவரும் இது தொடர்பாக கைது செய்யப்படவும் இல்லை மேலதிக விசாரனைகளை பளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.


Previous Post Next Post