“இலங்கையிலும் தாக்குதல் நடத்தத் திட்டம்” நியூசிலாந்தில் தாக்குதல் நடத்திய இலங்கையர் பற்றிய புதிய தகவல்!


  • குமாரதாஸன். பாரிஸ்.
நியூசிலாந்தில் சில ஆண்டுகளாகப் பொலீஸ் கண்காணிப்பின் கீழ் இருந்து வந்த இலங்கை இளைஞர் ஒருவர் அங்கு பொதுமக்களைக் கத்தியால் வெட்டிக் காயப்படுத்திய வேளை சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்.

ஆக்லாந்து நகரில் நவீன கடைத் தொகுதி ஒன்றில் அவரது கத்தி வெட்டுக்கு இலக்காகி ஆறு பேர் படுகாயமடைய நேரிட்டுள்ளது.
 
32 வயதான தாக்குதலாளியின் பெயர் விவரங்கள் பாதுகாப்புக் காரணங்களுக்காக வெளியிடப்படவில்லை. இப்போதைக்கு அவர்"எஸ்"என்றே குறிப்பிடப்படுகிறார். 2011 ஆம் ஆண்டில் இலங்கையில் இருந்து நியுசிலாந்துக்கு வந்துள்ளார்.
 
இஸ்லாமியப் பயங்கரவாதம் தொடர்புடைய இணையத்தளங்களைத் தேடிய காரணத்தால் உஷார் அடைந்த நியூசிலாந்துப் பொலீஸார் அவரைக் கண்காணிக்கத் தொடங்கினர். இரண்டு கத்திகளைக் கொள்வனவு செய்தமை மற்றும் பயங்கரவாதம் தொடர்பான சமூக ஊடகப் பதிவுகளை வெளியிட்டமைக்காக அவர் ஒரு முறை விசாரணைக்குட்படுத்தப்பட்டார்.

"நீங்கள் ஒரு கத்திக்காகக் கவலைப்படுகிறீர்கள், நானோ பத்துக் கத்திகளை வாங்குவேன்.. அது என் உரிமை" ஒரு தடவை நீதிமன்றம் ஒன்றில் நிறுத்தப்பட்ட போது அந்த இளைஞர் நீதிபதியிடம் இப்படிக் கூறினாராம். நியூசிலாந்தின் 'ஹெரால்ட்' (NZHerald) பத்திரிகை இத்தகவலை வெளியிட்டிருக்கிறது.

இலங்கைக்குத் திரும்பிச் சென்று அங்கு தாக்குதல் நடத்துகின்ற திட்டமும் அவரிடம் இருந்துள்ளது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
"ஒரு நாள் நான் என் நாட்டுக்குத் திரும்பி அங்குள்ள நியூசிலாந்து சமூகத்தினருக்கும் நான் யார் என்பதைக் காட்டுவேன்" -என்று அவர் தனது பதிவு ஒன்றில் குறிப்பிட்டிருந்தாராம். இரண்டு தடவைகள் சிரியாவுக்கும் ஒரு முறை சிங்கப்பூருக்கும் செல்ல முயற்சித்தவேளை அவர் விமானநிலையத்தில் தடுக்கப்பட்டார் என்ற தகவலைப் பாதுகாப்புத் தரப்பினர் வெளியிட்டுள்ளனர்.
 
மேற்கு நாட்டவர்களையும், இஸ்லாத்தை நம்பாதவர்களையும் கொல்வது எப்படி என்று இணையத்தில் தகவல்களைத் தேடியமை தெரியவந்த போதிலும் இதற்கு முன்னர் எந்தக் குற்றச் செயல்களிலும் ஈடுபடாத காரணத்தால் அந்த இளைஞனைச் சிறையில் அடைக்க முடியவில்லை.
 
வேட்டைக் கத்திகளை வாங்கினார் என்ற காரணத்துக்காகவோ அல்லது இணையத்தில் பயங்கரவாதக் காட்சிகளைப் பகிர்வதற்காகவோ ஒருவரைக் கைது செய்து சிறையில் அடைப்பதற்கு நியூசிலாந்தில் சட்டங்கள் இல்லை.

பயங்கரவாதத் தாக்குதல் ஒன்றைத் திட்டமிடுபவரைப்"பயங்கரவாதி" என்று கருதுவதற்கும் அங்குள்ள சட்டங்கள் அனுமதிப்பதில்லை.
 
ஆபத்தானவர் அல்லது பயங்கரவாத எண்ணம் உள்ளவர் என்பது தெரிந்தும் தாக்குதல் ஒன்றை நடத்தும் வரை அவரைக் கண்காணிப்பில் வெளியே வைத்திருக்கின்ற சட்ட நடைமுறைகளே அங்குள்ளன. அவ்வாறு வெளியே இருந்த பயங்கரவாதி ஒருவரே அங்கு பொதுமக்களைக் கத்தியால் காயப்படுத்தியுள்ளார்.
 
பொதுப் பாதுகாப்புக்கு ஆபத்தானவர், இரண்டு வேட்டைக் கத்திகளைக் கொள்வனவு செய்தவர், ஐ. எஸ். பயங்கரவாத அமைப்பின் வீடியோக்கள் வைத்திருந்தவர் ஆகிய மூன்று காரணங்களுக்காக சில ஆண்டுகளாகத் தீவிர கண்காணிப்பின் கீழ் இருந்த அந்த இளைஞர் கடைசியில் தாக்குதல் ஒன்றை நடத்திய சமயத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். 

நாட்டில் மிகவும் ஆபத்தான பேர்வழியாகக் கருதப்பட்டு- 24 மணிநேரமும்- பொலீஸ் கண்காணிப்பு வளையத்தினுள் இருந்தவர் எப்படியோ பொலீஸாரது கண்களில் மண்ணைத் தூவிவிட்டுக் கத்தியுடன் சென்று பொது மக்களைத் தாக்கிக் காயப்படுத்த முடிந்துள்ளது. 

பயங்கரவாதிகள் விடயத்தில் நியுசிலாந்தின் சட்டம் மற்றும் பாதுகாப்புக் கட்டமைப்புகளில் காணப்படுகின்ற பலவீனத்தை யே இச் சம்பவம் வெளிப்படுத்துகிறது என்பதைச் சிலர் சுட்டிக்காட்டுகின்றனர்.

இலங்கையில் 2019 ஏப்ரலில் ஈஸ்டர் தினத்தன்று நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலுக்குப் பின்னர் ஐ. எஸ். அமைப்புக்கும் இலங்கையர்களுக்கும் உள்ள தொடர்புகள் வெளிச்சத்துக்கு வரத் தொடங்கின. ஐ. எஸ். இயக்கத்தினால் ஈர்க்கப்பட்ட இலங்கைப் பிரஜை ஒருவர் மேற்கு நாடு ஒன்றில் தாக்குதல் நடத்தியிருப்பது இதுவே முதல் சம்பவம் ஆகும். ஆயினும் தாக்குதலாளிக்கும் ஐ. எஸ். அமைப்புக்கும் நேரடியான தொடர்பு எதுவும் இருப்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

இஸ்லாமியப் பயங்கரவாதக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட தனியாள் ஒருவரது
தாக்குதல் நடவடிக்கையே இது என்று நியூசிலாந்து கூறியுள்ளது.
Previous Post Next Post