பிரான்ஸில் 2 மணிநேர மின்வெட்டு நடைமுறைக்கு! இருளில் மூழ்கியது பரிஸ்!!

பிரான்ஸில் அதிகபட்சம் 2 மணிநேரம் மின்வெட்டு நடைமுறைக்கு வருகின்றது என அறிவிக்கப்பட்டுள்ளது. பீதியை உருவாக்காமல் பிரான்ஸை மின்வெட்டுக்கு தயார்ப்படுத்துங்கள் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஒரு வாரத்திற்கு முதல் குறித்த மின்வெட்டுத் தொடர்பில் அறிவிக்கப்பட்டதிலிருந்து அரசாங்கம் பல விடயங்களை நிவர்த்தி செய்ய வேண்டியிருந்தது.

உக்ரைன் போர், பிரஞ்சு அணு சக்தி பராமரிப்புச் சிக்கல்கள் என்பன குளிர்காலத்தில் மின்சாரத்தை வழங்குவதில் சிரமங்களை ஏற்படுத்தியிருக்கின்றன.

எனவே அறிவிக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் போதுமானதாக இல்லை என நிரூபிக்கப்பட்டால் மின்சார விநியோகம் ஒரு நாளில் மிகவும் பதட்டமான நேரங்களில் அதிகபட்சம் இரண்டு மணிநேரம் தடைப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

டிசம்பர் முதலாம் திகதி குளிர்கால மின்வெட்டுக்குத் தயாராவதற்கு குறிப்பிட்ட உத்தரவுகள் அரசியல் தலைவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

அதேநேரம் பாடசாலைகளில் சூடேற்றிகள் சாத்தியமாகாது விட்டால் காலையில் பாடசாலைகளை மூடுமாறும் கேட்கப்பட்டுள்ளது.

அத்துடன் வழிகாட்டி விளக்குகள் இயங்காது விட்டால் தண்டவாளத்தில் ரயில்கள் சிக்கிக் கொள்வதைத் தடுக்க சில ரயில் சேவைகளை ரத்துச் செய்ய வேண்டும் என்றும் வீதிகளில் போக்குவரத்து விளக்குகள் செயலிழந்தால் தங்கள் கார்களை எடுத்துச் செல்வதைத் தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை தலைநகர் பரிசின் பல பகுதிகளில் நேற்று திடீரென மின்தடை ஏற்பட்டது. இலட்சக்கணக்கான மக்கள் குளிரில் உறைந்தனர்.

இரவு 10.15 மணி அளவில் இந்த மின் தடை ஏற்பட்டது. பரிசில் 3 ஆம் 4 ஆம் 5 ஆம் வட்டாரங்களில் கிட்டத்தட்ட 125,000 வீடுகள் மின்சாரத் தடையைச் சந்தித்தது.

“1 ஆம் மற்றும் 4 ஆம் வட்டாரங்களில் 75 வீதிகளிலும், 3 ஆம் வட்டாரத்தில் 62 வீதிகளிலும், 5 ஆம் வட்டாரத்தில் 32 வீதிகளிலும் மின் தடை ஏற்பட்டுள்ளது” என RTE en Île-de-France நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

மின்சாரத்தடை இரவு 11 மணிவரை நீடித்ததாகவும், சூடேற்றிகளுக்காக மின்சாரத்தை பயன்படுத்தும் பலர் குளிரில் உறைந்திருந்ததாகவும் இணையத்தில் கருத்து தெரிவித்துள்ளனர்.
Previous Post Next Post