நள்ளிரவில் இலங்கை வந்த பிரான்ஸ் அதிபர்! விமான நிலையத்தில் ஜனாதிபதி விக்கிரமசிங்கவுடன் சந்திப்பு!!

அதிபர் மக்ரோன் பப்புவா நியூ கினியாவில் இருந்து பாரிஸ் திரும்பிய வழியில் நேற்று நள்ளிரவு கொழும்பில் இரண்டு மணிநேரம் தரித்துச் சென்றுள்ளார். அவரது விமானம் அங்கு எரிபொருள் நிரப்பிய சமயத்தில் சிறிலங்கா அரசுத் தலைவருடன் மிகக் குறுகியதும் விரைவானதுமான ஒரு சந்திப்பை அவர் மேற்கொண்டார் என்று அறிவிக்கப்படுகிறது.

எதிர்பார்க்கப்பட்டதை விடத் தாமதமாக உள்ளூர் நேரப்படி இரவு 23.30 மணிக்கே மக்ரோன் கொழும்பைச் சென்றடைந்தார். கொழும்பு விமான நிலையத்தில் அவரை அரசுத் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினர் வரவேற்றனர். மக்ரோனுடன் பிரான்ஸின் வெளிவிவகார அமைச்சர் கத்தரின் கொலென்னாவும் (Catherine Colonna) உடன் சென்றிருந்தார்.

வரலாற்றில் பிரான்ஸின் அதிபர் ஒருவரது முதலாவது கொழும்புப் பயணமாக அமைந்த இந்த முன்னறிவிக்கப்படாத திடீர் விஜயம் சர்வதேச அளவில் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.

"சிறிலங்காவும் பிரான்ஸும் இரண்டு இந்தியப் பெருங்கடல் நாடுகளாகும், திறந்ததும் வெளிப்படையானதும் செழிப்பானதுமான இந்தோ-பசிபிக் தொடர்பான பொதுவான இலக்கைக் கொண்டுள்ளன. 75 ஆண்டுகால ராஜதந்திர உறவுகளுடன், எங்கள் இருதரப்புக் கூட்டாண்மையின் புதியதோர் சகாப்தத்தைத் திறக்க முடியும் என்பதைக் கொழும்பில் நாங்கள் உறுதிப்படுத்தினோம் " -இவ்வாறு ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்புக்குப் பின்னர் மக்ரோன் தனது ருவீற்றர் பதிவு ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.

மக்ரோனின் விஜயம் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்தின் உத்தியோக பூர்வ அறிக்கைகள் எதுவும் இந்தச் செய்தியை எழுதும் வரை வெளியாகவில்லை.

ஆபிரிக்க நாடாகிய நைகரில் (Niger) ஏற்பட்டிருக்கின்ற ஆட்சிக் கவிழ்ப்பு விவகாரம் மீது பிரான்ஸின் அரசுத் தலைமை அதிக கவனம் செலுத்த வேண்டிய நிலைவரம் எழுந்துள்ளது.

அதிபர் மக்ரோன் கொழும்பில் இருந்து அவசரமாகப் பாரிஸ் திரும்பியதற்கு அதுவும் ஒரு காரணம் என்று எலிஸே மாளிகை வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

நைகர் நாட்டின் ஆட்சிக் கவிழ்ப்பை பிரான்ஸ் கடுமையான தொனியில் கண்டிப்பதாக மக்ரோன் பப்புவா நியூ கினியாவில் தங்கியிருந்த சமயத்தில் கூறியிருந்தார். இன்று சனிக்கிழமை அவர் பாரிஸ் திரும்பிய கையோடு நைகர் விவகாரத்தை ஆராய்வதற்காக அவசரமாகப் பாதுகாப்புச் சபையைக் கூட்டவுள்ளார் என்று அறிவிக்கப்படுகிறது.

ஆபிரிக்காவின் சாஹல் (Sahel) பிராந்தியத்தில் எஞ்சியிருந்த பிரான்ஸின் ஒரேயொரு கூட்டாளி நாடு நைகர் ஆகும். பிரான்ஸின் முன்னாள் காலனியாகிய அது 1960 இல் சுதந்திரம் பெற்றது. மாலி, புர்கினோ பாசோ போன்ற சாஹல் பிராந்திய நாடுகளின் வரிசையில் நைகர் நாடும் அல்-கெய்டா உட்பட இஸ்லாமியத் தீவிரவாத இயக்கங்களினால் கடும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களைச் சந்தித்துவருகிறது. அங்கு அடிக்கடி ஆட்சிக் கவிழ்ப்புகள் நடந்துள்ளன.

தற்சமயம் பதவியில் இருந்தவர் அதிபர் முகமது பாஸூம்.(Mohamed Bazoum) அண்மையில் தான் ஜனநாயக வழிமுறையிலான தேர்தல் மூலம் அவர் ஆட்சிக்கு வந்திருந்தார். அவரது பாதுகாப்புக்குப் பொறுப்பான காவல் படையின் தளபதி ஜெனரல் அப்துரஹமனே சியானி(General Abdourahamane Tchiani) திடீரெனச் சதிப் புரட்சி செய்து முகமது பாஸூமின் ஆட்சியைக் கைப்பற்றித் தன்னைத் தானே நாட்டின் நிர்வாகியாக அறிவித்திருக்கிறார். இந்த ஆட்சிக் கவிழ்ப்பை சட்டவிரோதமானது என்று கண்டித்துள்ள பிரான்ஸின் வெளிவிவகார அமைச்சு, அங்கு ராணுவ ஆட்சியை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்று தெரிவித்துள்ளது.

நைகரில் சுமார் ஆயிரத்து 500 பிரெஞ்சுப் படைவீரர்கள் நிலைகொண்டுள்ளனர். அத்துடன் யுரேனியம் அகழ்கின்ற பணியில் ஈடுபட்டிருக்கின்ற "ஓரனோ" (Orano) என்ற பிரெஞ்சுக் கம்பனியைச் சேர்ந்த 900 பணியாளர்களும் அங்கு தங்கியுள்ளனர்.
Previous Post Next Post