தீயில் எரிந்த மனைவி மரணம்! கணவன் தற்கொலை முயற்சி!! (படங்கள்)

குடும்பத் தகராறு காரணமாக தீயில் எரிந்த பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் வவுனியா கற்பகபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

தீயில் எரிந்த குடும்ப பெண் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே உயிரிழந்துள்ளார்.

கடந்த 7 ஆம் திகதி குடும்பத்திற்குள் ஏற்பட்ட முரண்பாடுகளால் மனைவி தீயில் எரிந்த நிலையிலும், கணவன் தலையில் படுகாயத்துடனும் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

மனைவி அவசர சிகிச்சைப் பிரிவிலும், கணவன் விபத்துக்கள் பிரிவிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.

இந் நிலையில் சிகிச்சை பெற்று வந்த கணவன் விபத்துப் பிரிவில் இருந்து வெளியேறி மூன்றாவது மாடியில் உள்ள மலசலகூடத்திற்குள் சென்று அதன் கதவை உடைத்து அதன் ஊடாக நிலத்தில் குதித்துத் தற்கொலை செய்ய முயன்றுள்ளதுடன், சிறிய கத்தியால் தனது கழுத்தையும் அறுக்க முயன்றுள்ளார்.

இதனை அவதானித்த வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், பொதுமக்கள் மற்றும் பொலிஸார் இணைந்து மூன்றாம் மாடியில் இருந்த யன்னலை உடைத்து அதனூடாகச் சென்று குதிக்க முயன்ற நபரைக் காப்பாற்றியுள்ளனர்.

கழுத்தில் காயமடைந்த நிலையில் குறித்த நபர் சிகிச்சைக்காக மீண்டும் விபத்துக்கள் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந் நிலையிலேயே தீயில் எரிந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த மனைவி நிதர்சன் தர்ஷினி (வயது-34) சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

கணவன் சி.நிதர்சன் (வயது-27) தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இச் சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Previous Post Next Post