இளைஞன் மீது பொலிஸார் தாக்குதல்! யாழ்.திருநெல்வேலியில் சம்பவம்!! (வீடியோ)

யாழ்ப்பாணம் திருநெல்வேலிச் சந்தியில் இளைஞன் மீது பொலிஸார் தாக்குதல் நடத்திய சம்பவத்தால் அப் பகுதியில் குழப்ப நிலை ஏற்பட்டது.

குறித்த இடத்தில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றுக்கு முன்பாக தனது சிறியரக ஹன்ரர் வாகனத்தை நிறுத்திய இளைஞன் மீதே கோப்பாய் பொலிஸார் இத் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

இச் சம்பவம் கடந்த நேற்று முன்தினம் (27) இடம்பெற்றுள்ளது.

அளவெட்டியைச் சேர்ந்த இளைஞன் தனது நெருங்கிய உறவினர் ஒருவரின் மரணச் சடங்குக்காக பொருட்களைக் கொள்வனவு செய்ய குறித்த வாகனத்தில் அப் பகுதிக்கு வந்துள்ளார்.
அப் பகுதியில் உள்ள வர்த்தக நிலையத்தின் முன் தனது வாகனத்தை நிறுத்த, அங்கு வந்த பொலிஸார் இது “நோ பாக்கிங்” என்று தெரிவித்துத் தண்டப் பணம் செலுத்த வேண்டும் எனக் கேட்டுள்ளனர்.

இதனையடுத்துப் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் வாகனத்தின் திறப்பைக் கையில் எடுக்க முயன்றபோது இளைஞன் அதனைத் தடுத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் குறித்த இளைஞனை சடுதியாகத் தாக்கியுள்ளார். இதனையடுத்துக் கோபமடைந்த இளைஞன் மேற்படி பொலிஸ் உத்தியோகத்தருடன் வாக்குவாதப்பட்டுள்ளார்.

இதனையடுத்து அப்பகுதியில் கூடிய பொதுமக்களும் பொலிஸார் இளைஞனைத் தாக்கியமைக்கு எதிர்ப்பு வெளியிட்டனர். இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் குழப்ப நிலையேற்பட்டது.

கோப்பாய் பொலிஸ்நிலையப் பொறுப்பதிகாரியின் கவனத்திற்கு இந்த விடயம் கொண்டு செல்லப்பட்டதையடுத்துப் பொலிஸ்நிலையப் பொறுப்பதிகாரி சம்பவ இடத்திற்கு வருகை தந்து சமரச முயற்சிகளில் ஈடுபட்டார்.

இதனையடுத்து நிலைமை கட்டுப்பாட்டிற்குள் வந்தது. இதேவேளைஇ யாழ். அளவெட்டியைச் சேர்ந்த 28 வயதான இளைஞரொருவரே இவ்வாறு தாக்குதலுக்குள்ளானவராவார்.
Previous Post Next Post