8 பேரைக் கொன்ற இராணுவ அதிகாரி விடுதலை! இழப்பீடு கோரும் உறவினர்கள்!! (படங்கள்)

யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் எட்டு பொதுமக்களைப் படுகொலை செய்த இராணுவ அதிகாரிக்கு உயர் நீதிமன்றால் தூக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்டிருந்தது.

இந் நிலையில் அவர் பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கோரி இலங்கை மனித உரிமை ஆணைக் குழுவில் உறவினர்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

2000 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19 ஆம் திகதி மிருசுவிலில் தமது வீடுகளைப் பார்க்கச் சென்ற 8 பொதுமக்கள், இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டு, கழிப்பறைக் குழிக்குள் போடப்பட்டனர்.

அவர்களுடன் சென்ற மற்றொருவர் தப்பிச் சென்று வெளியிட்ட தகவலின் அடிப்படையில் சடலங்கள் மீட்கப்பட்டதுடன், ஐந்து படையினருக்கு  எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் ஸ்ராவ் சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க என்ற இராணுவ அதிகாரிக்கு தூக்குத் தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீhப்பாயம் தீர்ப்பளித்தது. ஏனைய நான்கு படையினரும் போதிய சாட்சிகளில்லை என விடுதலை செய்யப்பட்டனர்.

இந் நிலையில் இந்தத் தீர்ப்புக்கு எதிராக சுனில் ரத்நாயக்க உயர் நீதிமன்றில் மேன்முறையீடு செய்திருந்தார்.

இதன்போது மேல் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு சரியானதே என்று உயர் நீதிமன்றத்தின் ஐந்து நீதியரசர்களும் ஏகமனதாக அறிவித்துள்ளனர்.

இந் நிலையில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ அதிகாரி ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் இரகசியமாக விடுதலை செய்யப்பட்டுள்ளார் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கடந்த வாரம் தகவல் வெளியிட்டிருந்தார்.

அதனையடுத்து படுகொலை செய்யப்பட்டவர்களின் குடும்பங்கள் தமக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் தமது உறவுகளுக்கு அரச வேலை தர வேண்டும் என்றும் கோரி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர்.





Previous Post Next Post