மனைவியைக் கொன்று கணவன் தற்கொலை முயற்சி! சகோதரிக்கும் கத்திக்குத்து!! (படங்கள்)

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டு, சகோதரியைக் காப்பாற்ற முற்பட்ட இளம் பெண்ணையும் கத்தியால் குத்தி தானும் கழுத்தறுத்துத் தற்கொலைக்கு முயன்றுள்ளார் குடும்பத் தலைவர் ஒருவர்.

இளம் குடும்பப் பெண் உயிரிழந்துள்ளதுடன், அவரது சகோதரியும் கொலையாளியும் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரபலனந்தனாறு மயில்வாகனபுரம் பகுதியில் இன்று அதிகாலை ஒரு மணியளவில் இடம்பெற்றுள்ளது.

பச்சிளைப்பள்ளி பிரதேச சபையில் பணியாற்றும் சுகந்தன் சகுந்தலா (வயது-25) என்ற குடும்பப் பெண்ணே கொல்லப்பட்டவர் ஆவார்.

அவரது கணவரான கொலையாளி சுகந்தன் (வயது-24), கொல்லப்பட்டவரின் இளைய சகோதரி கிருஷ்ணசாமி பிரியங்கா (வயது-22) ஆகிய இருவரும் கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சகுந்தலாவுக்கும் சுகந்தனுக்கும் 3 வருடங்களுக்கு முன்னர் திருமணம் இடம்பெற்றது. எனினும் அண்மைக் காலமாக இருவருக்கும் முரண்பாடு இருந்துள்ளது.

இன்று அதிகாலை மனைவியைக் கத்தியால் குத்தி சுகந்தன் கொலை செய்துள்ளார். அதனைக் கண்ட சகுந்தலாவின் சகோதரி தடுக்க முற்பட்டுள்ளார். அதனால் அவரையும் தலையில் கத்தியால் குத்தியுள்ளார். அத்துடன் தானும் கழுத்தறுத்துத் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

கொலையாளி தற்போது பொலிஸ் காவலில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார் என்று தருமபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.
Previous Post Next Post