காதலனால் ஏமாற்றப்பட்ட யாழ். மாணவி தூக்கிட்டுத் தற்கொலை!

காதலனால் ஏமாற்றப்பட்ட மாணவி ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளார். மாணவி உயிரிழந்த சோகம் தாங்க முடியாமல் அவரது தாயார் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.

இச் சம்பவம் நேற்றுக் காலை கொக்குவில் அரசடிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் கொக்குவில் இந்துக் கல்லூரியில் உயிரியல் பிரிவில் கல்வி கற்கும் மகேஸ்வரன் கஜானி (வயது-17) என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மிகவும் வறுமைப்பட்ட இந்த குடும்பம் கடந்த கால யுத்தத்தின் போது பாதிக்கப்பட்ட நிலையில் வன்னிப் பிரதேசத்தில் இருந்து கொக்குவில் பகுதியில் வந்து மீளக்குடியமர்ந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த மாணவி நெடுந்தீவு பகுதியை சேர்ந்த 20 வயது வாலிபன் ஒருவனை கடந்த சில வருடங்களாக காதலித்து வந்துள்ளார். நேற்றுக்காலை தாயார் வெளியில் சென்றுள்ள நிலையில் அம்மம்மாவுடன் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்துள்ளார்.

காதலனுடன் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தவர் நீண்ட நேரமாக அழுது கொண்டு இருந்துள்ளார்.தொலைபேசி கதைத்துக் கொண்டு சென்ற பேரப்பிள்ளையை காணாத அம்மம்மா வீட்டுக்குள் சென்று பார்த்தபோது குளியலறைக்குள் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த திடீர் மரண விசாரணை அலுவலர் நமசிவாயம் பிறேம்குமார் மற்றும் பொலிசார் விசாரணை மேற்கொண்டிருந்தவேளை மன விரக்தியில் மிகவும் சோகமாக காணப்பட்ட தாயார் தனது மகள் உயிரிழந்த சோகத்தை தாங்கமுடியாமல் அறையினை பூட்டி விட்டு அவரும் தனக்கு தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார்.

தாய் தீயில் எரிவதை கண்ட யாழ்ப்பாணம் பொலிஸார் அறையின் கதவினை உடைத்து தீயினை கட்டுப்படுத்தியதுடன் உடல் முழுவதும் பலத்த எரி காயங்களுக்கு உள்ளான தாயையும் மீட்டு அம்புலன்ஸ் வண்டி மூலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுமதித்தனர்.

தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட மகளும் அதே வண்டியில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றமை கொக்குவில் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த மாணவி கொக்குவில் இந்துக் கல்லூரியில் உயிரியல் பிரிவில் கல்வி கற்பவராவார்.

காதலனால் ஏமாற்றப்பட்ட நிலையிலேயே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
Previous Post Next Post